அந்தகன் ; விமர்சனம்


இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் ரீமேக் தான் இந்த அந்தகன். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரசாந்த் நடித்து அவரது தந்தை தியாகராஜா இயக்கியுள்ள இந்த படம் தற்போது வெளியாகி உள்ளது. பிரசாந்தின் மீள்வரவு எப்படி அமைந்திருக்கிறது. பார்க்கலாம்.

பியானோ கலைஞரான பிரசாந்த் வெளிநாடு சென்று செட்டிலாக விரும்புகிறார். அதற்காக பார்வையற்றவராக நடிக்கிறார். ஹோட்டல் ஒன்றை நடத்திவரும் பிரியா ஆனந்துடன் பிரசாந்த்துக்கு காதல் ஏற்படுகிறது. அவர் மூலமாக முன்னாள் கதாநாயகன் கார்த்திக்கின் அறிமுகம் ஏற்படுகிறது. தனது மனைவி சிம்ரனுக்கு தங்களது திருமண நாளில் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கும் விதமாக, பிரசாந்த்தை தங்களது பிளாட்டிற்கு வந்து பியானோ வாசிக்க ஒப்பந்தம் செய்கிறார். அதன்படி அவர் வீட்டுக்கு செல்லும் பிரசாந்த் அங்கே தன்னை அழைத்த கார்த்திக் பிணமாக கிடப்பதையும் அவரது மனைவி சிம்ரன், தன்னை பார்வையற்றவன் என நினைத்து, இதை எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன்னை இசைக்க சொல்லி கேட்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

மேலும் சிம்ரனின் கள்ளக்காதலன் சமுத்திரக்கனியும் அதே வீட்டில் ஒளிந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாலும், தான் பார்வையற்றவன் என்பது போலவே நடித்து அங்கிருந்து சாமர்த்தியமாக வெளியேறுகிறார் பிரசாந்த்.. இதையடுத்து சிம்ரன் சாமர்த்தியமாக இன்னொரு கொலை செய்ய, அதுவும் அங்கே வரும் பிரசாந்த் கண்களில் பட்டு விடுகிறது. என்னதான் பார்வையற்றவர் என்றாலும் பின்னாளில் தங்களுக்கு பிரச்சனை என நினைக்கும் சிம்ரன், பிரசாந்த்தின் வீட்டுக்கே தேடி வந்து, அவருக்கு ஸ்வீட்டில் மருந்து கலந்து கொடுத்து அவரது பார்வையை பறித்து நிஜமாகவே அவரை பார்வையற்றவர் ஆக்கிவிடுகிறார்.

அதுமட்டுமல்ல, அந்த சமயத்தில் அங்கே பிரசாந்த்தை தேடிவரும் பிரியா ஆனந்துக்கு, தனக்கும் பிரசாந்த்துக்கும் ஏற்கனவே தொடர்பு இருப்பது போல சித்தரித்து அவர்களது காதலையும் முறித்து விடுகிறார். இதன்பிறகு இழந்த பார்வையையும் இழந்த காதலையும் பிரசாந்த்தால் திரும்ப பெற முடிந்ததா, சிம்ரனையும் அவரது காதலன் சமுத்திரக்கனியையும் பிரசாந்த்தால் ஏதாவது செய்ய முடிந்ததா என்பது மீதிக்கதை.

விரும்பிய கதை, தான் நடிக்க விரும்பிய கதாபாத்திரம் என எல்லாமே தன்னை தேடி வந்ததால், அந்த பார்வையற்றவன் கதாபாத்திரத்திற்கு பிரசாந்த் தனது நடிப்பால் இன்னும் மெருகூட்டி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.. அவருக்கு பார்வை தெரியும் என கொஞ்ச நேரத்திலேயே நமக்கும் தெரிந்து விடுவதால், அவரது பார்வையற்றவராக அவரது நடிப்பில் செயற்கைத்தனம் இருப்பதாக தோன்றினாலும் கூட, அவரும் நடிக்கிறார் தானே என எளிதாக நம்மை சமாதானப்படுத்திக் கொள்ள முடிகிறது

பொருந்தாத கணவனுடன் வாழ முடியவில்லை என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் இரண்டாவது மனைவி கதாபாத்திரத்தில் சிம்ரன்.. வில்லத்தனம் கலந்த அந்த கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு நமக்கு ரொம்பவே புதுசு.. குறிப்பாக பிரசாந்த்தின் இடத்திற்கே வந்து அவரை மிரட்டி பணிய வைக்கும் இடம் நிச்சயம் நாம் எதிர்பாராத ஒன்று.

காதலன் பார்வை தெரியாதவர் என்றாலும் அவரது இசையால் மனதைப் பறிகொடுக்கும் காதலியாக பிரியா ஆனந்த். ரொமான்ஸ் கோபம் என கலந்து கட்டி அடித்துள்ளார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கும் திரைக்கதையில் முக்கியமான இடம்.அதற்குத்தக்க உழைத்திருக்கிறார். நடிகராகவே நடித்திருக்கும் கார்த்திக் வரும் காட்சிகளும் அவருடைய பழைய படக்காட்சிகளும் மிகச்சரியாக அமைந்து படத்தைக் கலகலப்பாக்குகின்றன. நடிகர்கள் கே.எஸ். ரவிக்குமார், ஊர்வசி, யோகிபாபு என நட்சத்திரங்கள் நிறைய பேர் இருந்தாலும், அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்

இசையுடன் கலந்த கிரைம் கதை என்பதால் இரண்டையும் அழகாக மிக்ஸ் செய்து காட்சிகளுக்கு கணம் கூட்டியுள்ளார் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். பாடல்கள் அனைத்தும் ஒரு இனிமையான இசை நிகழ்ச்சி அனுபவத்தை கொடுக்கிறது. ஒளிப்பதிவாளர் ரவி யாதவின் கேமரா காட்சிகள் அனைத்தையும் கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் படமாக்கி கண்கலங்கு விருந்து படைத்திருக்கிறது.

இயக்குனராக மாறினாலும் எந்த குறையும் வைக்காமல் தானே பார்த்து பார்த்து காட்சிகளை செதுக்கியுள்ளார் நடிகர் தியாகராஜன். ஒரு சில இடங்களில் லாஜிக் இடித்தாலும் அதையெல்லாம் விறுவிறுப்பான திரைக்கதை பின்னுக்கு தள்ளி விடுகிறது. அந்தவகையில் சிரிக்க சிரிக்க ஒரு க்ரைம் ட்ராமாவை பார்க்கும் உணர்வே நமக்கு ஏற்படுகிறது. இந்தப்படத்தின் வெற்றி மீண்டும் பிரசாந்த்தை பிசியான நடிகராக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.