அறம் செய் ; விமர்சனம்


ஆளும் அதிகார வர்க்கத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் படமாக வெளியாகியுள்ள படம் தான் அறம் செய்.

பெண்ணியவாதியான அஞ்சனா கீர்த்தி, தன்னுடன் சிலரை அணி சேர்த்து கொண்டு அரசியலில் மாற்றம் நிகழ்த்தப் போகிறேன் என்று கிளம்புகிறார். அவரது குடும்பத்தினர் அத்தனை பேரின் அறிவுரையையும் மீறி தன் போக்கில் அறம் செய் என்ற அரசியல் அமைப்பின் மூலம், நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

இன்னொரு பக்கம் மருத்துவ மாணவரான நாயகன் பாலு எஸ்.வைத்தியநாதன், தான் படிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சக மாணவர்களுடன் சேர்ந்து போராடுகிறார். இதனால், அவருக்கு பல்வேறு மிரட்டல்கள் வருகிறது.

இந்த இரண்டு வகை போராட்டங்களும் இறுதியில் ஒரு புள்ளியில் ஒன்றிணைகின்றன. இவர்களின் போராட்டம் வென்றதா?, என்பது தான் படத்தின் கதை.

இன்னொரு டி.ஆரோ என நினைக்க வைக்கும் அளவுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார் பாலு எஸ்.வைத்தியநாதன். முதல் படத்திலேயே இப்படி ஒரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டதற்காகவே அவரை தாராளமாக பாராட்டலாம்.

அறம் செய் அமைப்பின் பொறுப்பாளராக வரும் அஞ்சனா கீர்த்தி, தான் ஏற்றிருக்கும் ஆளுமை மிக்க பாத்திரத்தின் வலிமையை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். பாலு எஸ்.வைத்தியநாதனின் காதலியாக நடித்திருக்கும் மேகாலி, பாடல்களுக்கு நடனம் ஆட மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.

காமெடி நடிகராக இருந்த லொள்ளு சபா ஜீவா, நாயகனின் நண்பனாக படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்து அசத்தியிருக்கிறார் .

படத்தின் உரையாடல்கள் என்னவோ நாட்டுக்குத் தேவையான புரட்சிக் கருத்துகள் தான். ஆனால் மேடை நாடக பாணியில் ஒவ்வொருவரும் அவர்கள் நின்ற இடத்தில் நின்று கொண்டு மணிக்கணக்காக வசனங்களை பேசிக்கொண்டிருப்பது நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. இவ்வகைப் படங்களில் பிரச்சார நெடி தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றாலும் அதை முடிந்தவரை கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும்

அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இப்படத்தை கொடுத்ததற்காக இயக்குனரை பாராட்டலாம்