அரண்மனை 4 ; விமர்சனம்


தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் ஆவலுடன் தங்களது படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுப்பதுண்டு.. ஆனால் மூன்று, நான்கு என முன்னேறி சென்றவர்கள் என்றால் அது ராகவா லாரன்ஸ் மற்றும் சுந்தர்.சி இருவரும் தான். ஏற்கனவே அரண்மனை படத்தின் மூன்று பாகங்களை கொடுத்து அதற்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ள இயக்குனர் சுந்தர்.சி இந்த நான்காவது பாகத்திலும் அதை தக்க வைத்துள்ளாரா ? பார்க்கலாம்.

வழக்கறிஞரான சுந்தர்.சியின் தங்கை தமன்னா. பத்து வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டு சென்றவர்.. திடீரென ஒருநாள் தங்கை தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாக தந்தி வர, பதைபதைப்புடன் அங்கே ஓடுகிறார் சுந்தர்.சி. தங்கை மட்டுமல்ல, தங்கையின் கணவர் சந்தோஷ் பிரதாப்பும் மரணம் அறிந்துள்ள செய்தி கிடைக்கிறது. தமன்னாவின் மகள் அடிபட்டு கோமாவில் இருக்க, மகன் மட்டும் நல்ல நிலையில் இருக்கிறான்.

ஆனால் அடுத்தடுத்து வரும் நாட்களில் வீட்டில் நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளும் வெளியே எதிராபாராமல் நடக்கும் துர் மரணங்களும் தன் தங்கை தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என அவருக்கு தெரிய வருகிறது. அது உண்மை என்றால் தமன்னாவையும் அவரது கணவரையும் கொன்றது யார் ? எதற்காக கொன்றார்கள் ? சுந்தர்.சி வந்தபின் நடக்கும் துர் மரணங்கள் ஏன் ? கொல்பவர்கள் மனிதர்களா அல்லது பேயா ? அவர்களிடம் இருந்து தமன்னாவின் குழந்தைகளை சுந்தர்.சி காப்பாற்றினாரா என்பது தான் மீதிக்கதை.

ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை காட்சிகளில் வழக்கம் போல் பிரித்து மேயும் சுந்தர்.சி, தான் ஏற்ற வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளும் வலிந்து திணிக்கப்படாமல் இருப்பது சுந்தர்.சியின் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறது. அந்த க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி பதைபதைக்க வைக்கிறது.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகவும் சரி, பாதிப்படத்திற்கு மேல் பேயாகவும் சரி எந்தவித தயக்கமும் இல்லாமல் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் தமன்னா. ராஷி கண்ணா சுந்தர்.சி.க்கு ஜோடியாக வருவார் என நினைத்தால் வெறும் கவர்ச்சியான டாக்டராக மட்டுமே வந்து போகிறார்.

இந்த படத்திலும் யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா ஆகியோர் தனி டீமாக காமெடியில் கலக்கியுள்ளனர். ஆனால் முந்தைய பாகங்களுடன் ஒப்பிடும்போது ஆட்டம் கொஞ்சம் கம்மி தான்.

தமன்னாவின் கணவராக சந்தோஷ் பிரதாப், மர்ம சாமியாராக ‘கருடா’ ராமசந்திர ராஜு இவர்களுடன் டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, சஞ்சய், கே.எஸ்.ரவிக்குமார் என பலரும் பொருத்தமான தேர்வென நிரூபித்திருக்கிறார்கள்.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கின்றன., க்ளைமாக்ஸில் வரும் ஆக்ரோஷமான அம்மன் பாடலும் அதற்கு சிம்ரன், குஷ்பு இருவரின் சாமியாட்டமும் செம. ஒளிப்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி இயற்கை காட்சிகளை மட்டுமல்ல பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் புகுந்து விளையாடி இருக்கிறார்.

இந்த நான்காம் பாகத்தில் தற்போதைய டிரண்டுக்கு ஏத்த மாதிரி திரைக்கதையை கொண்டு சென்றிருக்கிறார் சுந்தர். சி.வழக்கமாக குடியிருக்கும் யாராவது ஒரு நபர் மீது பேய் இறங்கும். அந்த பேயை விரட்டுவது போல கதையாக அமைத்து இருப்பார். ஆனால் இந்த நான்காம் பாகத்தில் பேய்க்கும் பேய்க்கும் சண்டை என்கிற பாணியில் புதிய கோணத்தில் அமைத்து இருக்கிறார். பேய் எங்கிருந்து வந்தது என காரணம் கூறியுள்ள சுந்தர்.சி ஆச்சரியாமாக பேயின் பிளாஸ்பேக்கை நோண்டாமல் விட்டு விட்டார். இன்னும் காமெடி காட்சிகளில் கலகலப்பை ஏற்றி இருக்கலாம். மற்றபடி அரண்மனை 5 ஆம் பாகத்திற்காக காத்திருக்கும் எதிர்பார்ப்பை இந்தப்படம் ஏற்படுத்தி உள்ளது.