மலை பிரதேசமான கொடைக்கானல் பின்னணியில் கதை நகர்கிறது. சில இளைஞர்கள் தொடர்ச்சியாக தங்களது வயிற்றைக்கிழித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்களுக்கிடையே எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் இருப்பதால், போலீசார் துப்புக் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இருந்தும் போலீஸ் அதிகாரி ஷாமின் தீவிர புலாணய்வின் மூலம், பல திடுக்கிடும் விஷயங்கள் வெளிவருகிறது
ஷாம் ஒரு நிஜ போலீஸ் அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார். அவரது உடற்கட்டும், முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு குற்றத்தின் பின்னணியைத் தேடி அலைவதும் சிறப்பு. அவர் விசாரணை செய்யும் விதமே அதிர்வை ஏற்படுத்துகிறது. சண்டைக் காட்சிகளில் சாகசம் செய்திருக்கிறார்.
நிரா என்பவர் நாயகியாக நடித்திருக்கிறார்.இந்தக் கதையில் அவருடைய பங்கு குறைவு என்றாலும் வருகிற காட்சிகளில் நிறைவாக இருக்கிறார். நாயகன் ஷாம் உடன் வரும் காவலராக நடித்திருக்கும் சுமந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் புதுமுகம் என்ற அடையாளமே தெரியாத வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மனநல மருத்துவராக நிழல்கள் ரவி, காவல் துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜே.ஆர்.மார்டின் ஆகியோர், தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்
இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் திரைக்கதையில் இருக்கும் படபடப்பை ரசிகர்களிடத்திலும் கடத்திவிடுகிறார்.
ஒரு விறுவிறு சஸ்பென்ஸ் நாவல் படிப்பது மாதிரியான திரைக்கதையும், மாறுபட்ட கதைக்களமும் அஸ்திரம் படத்தை ரசிக்க வைக்கின்றன. வழக்கமான மசாலா படம் மாதிரி இல்லாமல், மன்னர் காலத்து சம்பவங்கள், வசிய முறை குறித்த நம்பிக்கைகள் எல்லாவற்றையும் தற்காலத்துடன் இணைத்து நன்றாக ரசித்து ஒரு கதையை எடுத்திருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ராஜகோபால்.