இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் பகாசூரன்.
‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்கள் மூலம் கவனம் பெற்றவர் மோகன்.ஜி. அடுத்ததாக ‘ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்’ தயாரிப்பில் உருவாகும் ‘பகாசூரன்’ படத்தை இயக்கி முடித்து இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
முழுவதும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட இந்த உலகில் செல்போன் என்ற சாதனம் இப்போது இல்லை என்றால் என்னவாகும் ? இப்படி ஒரு கேள்வியை இந்த தலைமுறை இளைஞர்களிடம் கேட்டால் பதில் சொல்ல கூட தயங்குவார்கள். அப்படி அத்யவசியமாக மாறியுள்ள செல்போன்களாலும் அதில் இருக்கும் சில செயலிகளாலும் ஏற்படும் பாதிப்புகளை பகாசூரன் திரைப்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார் இயக்குநர் மோகன்ஜி.
முன்னாள் ராணுவ அதிகாரியான நட்டி நட்ராஜ் யூடியூப் சேனல் மூலம் சமூகத்தில் நடக்கும் குற்றங்களையும் அதன் பின்னணிகளையும் வீடியோக்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்து வருகிறார். திடீரென அவரது அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வர பதட்டத்திலேயே சம்பவ இடத்திற்கு செல்கிறார். தனது அண்ணன் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதை உணர்ந்த அவர் காவல்துறை உதவியுடன் தானே அதனை விசாரிக்கவும் செய்கிறார். இது ஒரு புறம் இருக்க சிவ பக்தரான செல்வராகவன் வெறிக்கொண்டு பலரை கொலை செய்து வருகிறார். நட்ராஜ்ஜின் அண்ணன் மகள் தற்கொலைக்கும் சிவ பக்தரான செல்வராகவனுக்கும் இடையே என்ன தொடர்பு ? செல்வராகவன் எதற்காக இத்தனை கொலை செய்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்பதே பகாசூரன் படத்தின் கதை.
சாணிகாயிதம், பீஸ்ட் போன்ற படங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு இயக்கம் மட்டுமல்ல நடிப்பும் கைவந்த கலை என முன்னோட்டம் காண்பித்த செல்வராகவன் பகாசூரனில் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். ஆக்சன், எமோஷனல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராக மாறியவர் நட்டி என்ற நட்ராஜ், முன்னாள் ராணுவ அதிகாரியான அவர் இன்வெஸ்டிகேசனில் இறங்கி துப்பறியும் விதம் அருமை. நட்டி அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இவர்களை தவிர ராதாரவி, கே.ராஜன், கூல் சுரேஷ் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளனர்.
சாம்.சி.எஸ்.ஸின் இசையும், பரூக் பாடஷாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
படத்தின் முதல்பாதி சற்று விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதி பல்வேறு லாஜிக் மீறல்களால் தனது வேகத்தை இழக்கிறது. செல்போன்கள் மூலமாக மாணவிகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதாக தொடங்கி வேறு ஒரு கதைக்கு எடுத்து சென்றது ஒரு முழுமையான தீர்வு கிடைக்காமல் போனது போலவே உணர்த்துகிறது. ஆனால் சமூகத்தில் நடக்கும் முக்கியமான பிரசனையை படம் சொல்கிறது.