போட் ; விமர்சனம்


நகைச்சுவை படங்களை தொடர்ந்து கொடுத்துவந்த இயக்குநர் சிம்புதேவன் சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களம் இறங்கியுள்ள படம் இந்த போட். காமெடியில் இருந்து இதில் ரூட் மாறி உணர்வுப்பூர்வமான கதையை கையில் எடுத்துள்ளார். அவருக்கு இதுவும் கை கொடுத்திருக்கிறதா பார்க்கலாம்.

1943 ஆம் ஆண்டு நடக்கும் கதையாக படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போர், சுதந்திரப் போராட்டம் என நடந்த காலகட்டத்தில் ஜப்பான் இந்தியா மீது குண்டு மழை பொழிகிறது. இதனால் உயிர் பயத்தில் சென்னையில் உள்ள மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள போராடுகிறார்கள். மீனவர்கள் பலர் தங்களது படகுகள் மூலம் நடுக்கடலுக்கு சென்று தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.

காசிமேடு பகுதி மீனவரான யோகிபாபுவும் தனது பாட்டியுடன் தனது துடுப்பு படகில் நடுக்கடலுக்கு செல்ல முயற்சிக்கிறார். அவருடன் வெவ்வேறு மொழி பேசும் இந்தியர்களும் படகில் பயணிக்கிறார்கள். நடுக்கடலுக்கு சென்றதும் படகு பழுதடைந்து விடுகிறது.

அதனால், தொடர்ந்து பயணிக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கும் படகை கரைக்கு செலுத்த வேண்டும் என்றால், படகில் இருப்பவர்களில் மூன்று பேர் வெளியேற வேண்டும், என்று யோகி பாபு சொல்கிறார். இதனால் யார் வெளியேறுவது என்கிற குழப்பம் ஏற்பட்டு போட்டில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அவர்கள் எப்படி சமாளித்து, எப்படி தப்பித்தார்கள் என்பது மீதிக்கதை.

ஒரே போட். அதில் பத்து விதமான மனிதர்கள் என படம் நகிர்கிறது. கதையின் நாயகனாக காசிமேடு பகுதி மீனவராக நடித்திருக்கும் யோகி பாபு, தனது வழக்கமான உருவ கேலி நகைச்சுவை வசனங்களை தவிர்த்துவிட்டு, இயல்பான கோபம், கொப்பளிக்கும் கருணை, இக்கட்டான நிலையில் வெடிக்கும் ஆத்திரம் என இயக்குநர் சிம்புதேவன் சொன்னதை மட்டுமே அற்புதமாக நடித்து உள்ளார் .

யோகி பாபுடன் படகில் பயணிக்கும் குல்லபுலி லீலா, கெளரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, சாரா, ஜெஸ்ஸி, அக்‌ஷத் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி வசனங்களை சரியாக உச்சரித்திருக்கிறார்கள். படகில் அமர்ந்தபடி நடித்திருந்தாலும் வசனங்களுக்கு ஏற்ப உடல்மொழியை வெளிப்படுத்தி கதபாத்திரங்களாக பயணிக்க முயற்சித்திருக்கிறார்கள். முக்கியமாக யோகி பாபு கௌரி கொஞ்ச நேர ரொமான்ஸ் ரசிக்க வைக்கிறது.

கடலும், படகும் மட்டுமே கதைக்களன் என்கிற சவாலை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறார்.

முழுக்க முழுக்க முழுப்படத்தையும் நடுக்கடலில் வைத்து ஒரு படகில் முழு படத்தையும் முடித்து இருப்பதற்காகவே இயக்குனர் சிம்பு தேவனை பாராட்டலாம். படகை சுற்றியே படம் நகர்வதால் சுவாரஸ்ய காட்சிகளை விட வசனங்கள் தான் ஆக்ரமித்துள்ளன. நிகழ்கால சம்பவங்களை அந்த காலகட்டத்தின் நிகழ்வோடு சம்பந்தப்படுத்தி வசனங்களை அமைத்திருந்தாலும் உரையாடல்கள் கவனம் ஈர்க்கும் அளவுக்கு படகு பயணம் கவனம் ஈர்க்கவில்லை. பொட்டில் கடலில் பயணம் செய்ய விரும்பி அது முடியாதவர்கள் இந்தப்படத்திற்கு போனால அந்த அனுபவம் கிடைப்பது உறுதி.