கொத்தனார் வேலை செய்துவரும் நாயகன் குரு சோமசுந்தரத்தரம் ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவரது மனைவியாக சஞ்சனா வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். தினசரி வேலைக்கு சென்றால் மட்டுமே இவர்களின் பசியை போக்க முடியும் என்ற சூழலில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அருகில் இருப்பவர்களுடன் குடிப்பழக்கம் குரு சோமசுந்தரத்தை தொற்றிக் கொள்ள, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்.
அவரின் மனைவி சஞ்சனா நடராஜன் குரு சோமசுந்தரத்தை ஜான் விஜய் நடத்தும் போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கிறார். அங்கே அவர் எதிர்பாராத துன்பங்கள் எல்லை மீறிப் போக, அங்கிருந்து தப்பித்து விடுகிறார். ஆனால் மனைவி தரும் அதிர்ச்சி வைத்தியம் காரணமாக மீண்டும் அந்த போதை மறுவாழ்வு மையத்துக்கு செல்கிறார். முடிவில் குடிகார நோயாளியாக இருந்த நாயகன் குரு சோமசுந்தரம் மதுபோதை பழக்கத்தில் இருந்து மீண்டு வந்தாரா? இல்லையா என்பது மீதி கதை
நாயகனாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், நிஜமான ஒரு குடிகாரனாகவே இந்த படத்தில் நம் கண்ணுக்குத் தெரிகிறார் முதல் காட்சியிலிருந்து, கடைசிவரையிலும் குடி அவரை ஆக்கிரமித்துவிட்டது என்பதை அவர் உணர்ந்தாலும் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்ற அந்த உணர்வை நமக்கு அப்படியே கடத்தி இருக்கிறார்.
குருவின் மனைவியாக சஞ்சனா நடராஜன் நடித்திருக்கிறார்.அவருடைய தோற்றமும் நடிப்பும் அச்சு அசலாக அமைந்திருக்கிறது.
போதை மீட்பு மையத்தை நடத்தும் ஜான் விஜய் தனது வழக்கமான அவரது பாணியைக் குறைத்து, இந்தக் கதாபாத்திரத்திற்கான துல்லியமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் தினகரன் சிவலிங்கம் அவரை வேறு விதமாக மாற்றி இருக்கிறார்.
லொள்ளு சபா மாறன்,ஆண்டனி, பாரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ்.கருணா பிரசாத், சுஹாசினி சஞ்சீவ், ஓவியர் சோவ்.செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், காலா குமார், அன்பரசி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்
ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜியின் கேமரா, கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் கடத்துவதில் அதிகம் மெனக்கெட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தை விவரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
குடிக்கு அடிமையானவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக ஒரு சமுக பொறுப்புடன் இயக்கியுள்ளார் இயக்குனர் தினகரன் சிவலிங்கம். குறிப்பாக மறுவாழ்வு மையங்கள் செயல்படும் விதம், அதன் மூலம் மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டவர்களின் அடுத்த நிலை, என இதுவரை திரையில் பார்த்திராத பல விசயங்களை இதில் சொல்லி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். ஒரு சிறு கதை தான், அதை சற்று இழுத்துக் கொண்டு சென்றது கொஞ்சம் நெருடல் என்றாலும், எடுத்த நோக்கத்திற்காக இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.