பிரதர் ; விமர்சனம்

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் உள்ளிட்ட காமெடி வெற்றி படங்களை கொடுத்த எம் ராஜேஷ் இயக்கத்தில் முதன் முறையாக ஜெயம் ரவி கைகோர்த்திருக்கும் படம் இது. ஆனால் கால மாற்றத்திற்கு ஏற்ப கதையிலும் காமெடியிலும் புதிய முயற்சி மேற்கொண்டு இருக்கிறார்களா ? பார்ப்போம்.

சட்டம் படித்த ஜெயம் ரவி வேலை வெட்டிக்கு போகாமல் அங்கங்கே நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் பிரச்சனை வீடு தேடி வர அப்பாவுக்கு மகனை பிடிக்காமல் போகிறது. ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியின் செயல்களால் அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக்கே வந்து சீரியஸ் ஆகிறது. அப்பாவை பார்க்க வரும் ஜெயம் ரவியின் அக்கா பூமிகா தன்னுடைய ஊரான ஊட்டிக்கு அழைத்துச் சென்று அவரை மாற்ற முயற்சிக்கிறார்.

ஆனால் போன இடத்திலும் ஜெயம் ரவியின் மாறாத குணத்தால் பிரச்சனை தொடர்கிறது. அக்கா கணவரான நட்டியுடன், மாமனாரான ராவ் ரமேஷ் உடன் என எல்லோருடனும் ஏதோ ஒரு வகையில் ஜெயம் ரவிக்கு சண்டை வருகிறது. இதனால் அக்கா ப்போமிகா தனது கணவர் வீட்டை பிரிந்து தனது தந்தை வீட்டுக்கு வரும் அளவிற்கு நிலைமை முற்றுகிறது.

ஆனாலும் தன் பக்கம் இருக்கும் தவறை உணராத ஜெயம் ரவிக்கு தன்னைப் பற்றிய எதிராக ஒரு அதிர்ச்சி செய்தி ஒன்று தெரிய வருகிறது. அதன் பிறகு ஜெயம் ரவி தனது தவறை உணர்ந்தாரா இல்லை மீண்டும் அதே போல தான் இருந்தாரா ? அது என்ன அதிர்ச்சி செய்தி என்பது மீதி கதை.

கதை கேட்டபோது ஜெயம் ரவிக்கு எந்த அடிப்டையில் பிடித்திருந்தது என தெரியவில்லை. இப்போது படம் பார்த்தால் அவருக்கே கூட குழப்பம் வரும்.. ஆனாலும் பொருந்துகிறதோ இல்லையோ கிடைத்த பாத்திரத்திற்கு நியாயம் செய்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார்.

நாயகி பிரியங்காமோகனுக்கு அளழுக்கு அழகு சேர்ப்பதாக நினைத்து மேக்கப்பை அள்ளி தெளித்துள்ளார்கள். அதுதான் உறுத்தலாக இருக்கிறது. மற்றபடி நன்றாகவே நடித்தும் இருக்கிறார்.

நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் பூமிகா,அந்த வேடத்துக்காக அளவெடுத்துத் தைத்தது போல் இருக்கிறார். தம்பி மீதான பாசம், குடும்பம் மீதான அக்கறை ஆகியனவற்றை சரியாக வெளிப்படுத்துகிறார்.டப்பின் தான் செட்டாகவில்லை. அவருடைய கணவராக நடித்திருக்கும் நட்டியும் சரியான தேர்வுதான்.

ஹரிஷ் ஜெயராஜின் இசையில், ”மக்கா ரிஸி” பாடல் ஹிட்டானாலும், மற்ற பாடல்கள் எடுபடவில்லை. பின்னணி இசையும் ரொம்பவே சுமார் ரகமே. ஒளிப்பதிவாளர் விவேகானந்தம் சந்தோஷத்தின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.

அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் காதல் ஆகியவற்றின் சரியான அளவுகளைக் கொண்ட ஒரு ஃபீல்-குட் ஃபேமிலி என்டர்டெயின்னரின் அனைத்து அம்சங்களும் இந்த பிரதர் படத்தில் கொடுத்து இயக்கியிருக்கிறார் ராஜேஷ். ஆனால் எதுவுமே ஒன்றுடன் ஒன்று முழுமையாக கனெக்ட் ஆகவில்லை என்பதுதான் சோகம்.