தீபாவளி பண்டிகை என்றாலே அரசு ஊழியர்கள் முதற்கொண்டு தனியார் ஊழியர்கள் வரை அனைவரும் ஆவலோடு எதிர்பார்ப்பது தீபாவளி போனஸை தான். அதை வைத்து பண்டிகைக்கான பல கனவுகளை நிறைவேற்ற பட்ஜெட் போட்டு வைத்திருப்பார்கள். இங்கே நம் நாயகன் விக்ராந்த்தும் அப்படி ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருப்பதைக் கொண்டு சிக்கனமாக குடும்பம் நடத்தும் மனைவி ரித்விகா. அழகான ஒரு மகன்.
தீபாவளி நெருங்கும் சமயத்தில் இதே போல தீபாவளி போனஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார் விக்ராந்த். கடைசி நேரத்தில் போனஸ் கிடைக்காமல் போகவே, குடும்பத்தின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றுவதற்காக வேறு சில வழிகளில் இறங்குகிறார் விக்ராந்த்.
ஆனால் அதுவே அவரை தேவையில்லாத சிக்கல்களில் மாட்டி விடுகிறது. அவர் செய்தது சரியா ? அப்படி என்ன சிக்கல்களை சந்தித்தார் ?. அதிலிருந்து மீண்டு குடும்பத்துடன் தீபாவளியை சந்தோஷமாக அவரால் கொண்டாட முடிந்ததா ? என்பது மீதி கதை.
விக்ராந்த் என்கிற ஒரு நடிகரை பெரும்பாலும் நிறைய பேர் வீணடிக்கவே செய்து இருக்கிறார்கள். இப்படி ஒரு அருமையான கதாபாத்திரம் கிடைக்கும்போது அதில் தன்னால் அழகாக பொருந்திப் போக முடியும் என இந்த குடும்பத் தலைவன் கதாபாத்திரத்தில் தன்னை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் விக்ராந்த். இயலாமை, ஏக்கம், அன்பு, கோபம் என எல்லா உணர்வுகளையும் மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஜாடிக்கேத்த மூடியாக பாந்தமான மனைவியாக ரித்விகா. கணவனுக்கு தன்னால் ஒரு பொருளை வாங்கிக் கொடுக்க முடியவில்லை என பரிதவிக்கும் போது நம்மை நெகிழ வைக்கிறார். இவர்களின் மகனாக நடித்திருப்பவரும் தனது ஏக்கம், எதிர்பார்ப்பு என இந்த சின்ன வயதிலும் தெளிவாக உணர்ந்து நடித்திருப்பது ஆச்சரியம் தான்.
வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருந்தாலும், வறுமை நிலை மாறாமல் இருக்கும் எளிய மக்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் கூட தங்களது சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றுவதற்காக எத்தகைய போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது, என்பதை நேர்த்தியாக மட்டும் இன்றி பார்வையாளர்களின் மனதுக்கு நெருக்கமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜெயபால்.ஜெ.