தினசரி ; விமர்சனம்


ஸ்ரீகாந்த், மிடில் கிளாஸ் வாழ்க்கையிலிருந்து எப்படியாவது உயர் நிலையை அடைய விரும்பும் ஐடி ஊழியர். தன்னை விட அதிகமாக சம்பாரிக்கும் பெண்ணை திருமணம் செய்ய ஏகப்பட்ட நிபந்தனையோடு அவரது பெற்றோர் எம்.எஸ் பாஸ்கர், மீரா கிருஷ்ணன் ஆகியோர் பெண் தேடி வருகின்றனர்

அதே சமயத்தில் நாயகி சிந்தியா அதிகமான சம்பளத்துடன் நல்ல வேலையில் இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லாமல் வீட்டில் குடும்பத்தாரை கவனித்துக் கொண்டு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஸ்ரீகாந்த் நிபந்தனைகளை மறைத்து பொய் சொல்லி சிந்தியாவை அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு, ஸ்ரீகாந்த் தின் நேர் எதிர் குணம் கொண்ட சிந்தியாவுடன் வாழ்வது பிரச்சனையில் முடிகிறது. இதன் பின்னர் என்ன நடந்தது? சொல்லும் படமே, தினசரி.

இதற்கு முன் நடித்த படங்களை விட இப்படத்தில் கதாபாத்திரத்தோடு ஒன்றி தனது நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஸ்ரீகாந்த். எதிர்பார்ப்பு, ஏமாற்றம், மனமாற்றம் என அனைத்துவிதமான உணர்வுகளையும் அளவாக கையாண்டு கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

வெளிநாடுவாழ் தமிழ்ப்பெண்ணுக்குரிய அத்தனை அம்சங்களுடனும் இருக்கிறார் நாயகி சிந்தியா லூர்தே.அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டிய வேடத்தைத் துணிவுடன் ஏற்று நிறைவாகச் செய்திருக்கிறார்.

அம்மாவாக நடித்திருக்கும் மீரா கிருஷ்ணன் அக்காவாக நடித்திருக்கும் வினோதினி, நண்பனாக நடித்திருந்த பிரேம்ஜி, கேபிஒய் சரத், சாம்ஸ், சாந்தினி தமிழரசன், ராதாரவி என அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை எந்தவித குறையும் இல்லாமல் நடித்திருந்தனர்.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் வகையில் இருப்பதோடு, பாடல் வரிகள் புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் பணி படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக நாயகன் ஸ்ரீகாந்தை பாடல் காட்சிகளில் இளமையாக காண்பித்திருக்கிறார்.

எழுதி, இயக்கியிருக்கும் ஜி.சங்கர், நல்ல ஒரு அருமையான குடும்பப் பாங்கான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். இருப்பதை கொண்டு நிம்மதியான வாழ்க்கையை வாழாலாம். அதிக பணத்தாசை பெரும் நஷ்டத்தில் விடும் என்ற கருத்தை வலியுறுத்தி குடும்ப பாசமே வலிமையானது என அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.