காலேஜ்ல கெத்து காமிச்சுக்கிட்டு, அலப்பறை பண்ணிக்கிட்டு, பொண்ணுங்க முன்னாடி சீன் போட்டு நான் தான் பெரிய ஆளு அப்படின்னு சுத்திகிட்டு, படிப்புலாம் எங்களுக்கு பெரிய விஷயமே இல்லைன்னு சொல்ற ஸ்டூடண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க.. அது மாதிரி ஒருத்தர் தான் பிரதீப் ரங்கநாதன். அப்படி அந்த காலேஜ்ல படிக்கிற அனுபமாவ கரெக்ட் பண்றதுக்காக இப்படி சீன் போட்டு லவ்வையும் ஓகே பண்ண வச்சிர்றாரு..
ஆனா காலேஜ் முடிச்சுட்டு வெளியே வரும்போது 48 அரியர்சோட வெளிய வராரு. இவன் காலேஜ்ல லவ் பண்றதுக்கு தான் செட்டாவான்.. ஆனா இவனை வச்சு காலம் பூரா குடித்தனம் நடத்த முடியாதுன்னு புரிஞ்சுகிட்ட அனுபமா பிரதீப் கிட்ட வந்து, “தம்பி உன்னை திருத்துறது என் வேலயில்ல.. போய் உருப்புடுற வழியை பாரு”ன்னு சொல்லி தன்னோட கல்யாண பத்திரிக்கை நீட்டி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குறாங்க.. அப்பதான் பிரதீப்புக்கு லைஃப்ல கொஞ்சம் எதார்த்தம் புரியுது
அப்ப கூட பாத்தீங்கன்னா நாமளும் வாழ்க்கைல முன்னுக்கு வரணும்னு நினைக்கிறத விட, நம்ம காதலிச்சவ நம்மள விட்டுட்டு போயிட்டால்ல.. அவ புருஷன விட நாம ஒரு ரூபாய் அதிக சம்பாதிக்கணும்னுதான் பிரதீப் ரங்கநாதனுக்கு தோணுது.
இதுல பிரதீப் ரங்கநாதன் என்ன பண்றாருன்னா. குறுக்கு வழியில சீக்கிரமா முன்னேற நெனச்சு டூப்ளிகேட் சர்டிபிகேட் ரெடி பண்ணி நம்ம கௌதம் மேனன் நடத்துற கம்பெனில இன்டர்வியூல பொய் சொல்லி நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேந்துர்றார். இவரோட வேலை சம்பாத்தியத்தை பார்த்து கே.எஸ் ரவிக்குமார் தன்னோட பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்கிறதுக்கு ஐடியா பண்றாரு
கல்லூரி பிரின்ஸ்பால் மிஸ்கினுக்கும் பிரதீப் ரங்கநாதன் பண்ண பித்தலாட்டம் தெரிய வந்துருது. பிரதீப்கிட்ட படிப்பு இல்ல, ஆனா ஜெயிக்கணும்னு ஒரு வெறி இருக்கிறத பார்த்த மிஸ்கின் அவருக்கு ஒரு டாஸ்க் வைக்கிறாரு.. அது என்ன டாஸ்க் ? பிரதீப் அத சரியா செஞ்சாரா ? அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு அப்படிங்கறத கொஞ்சம் சுவாரசியமாக சொல்லி இருக்காங்க
நாயகனாக நடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, அதை தாண்டிய வாழ்க்கையில், தோல்வியடைந்தவர் என்பது தெரியாமலேயே கெத்தாக வலம் வந்து பிறகு நொந்துப் போகும் இடங்களில் அசால்டாக நடித்திருக்கிறார் குறிப்பாக சுலபமாக வேலை கிடைக்க எடுக்கும் தப்பான வழிமுறைகள், அதனால் ஏற்படும் சிக்கல்கள், அவசர சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நிராசையாகும் தருணங்கள் என்று அச்சு அசலாக இக்கால இளைஞர்கள் சிலரின் குணாதிசயங்களை தன்னுடைய துள்ளலான நடிப்பின் மூலம் அசத்தியுள்ளார்.
முதலில் கல்லூரி மாணவி, முன்னாள் காதலி, விரிவுரையாளராக அனுபமா பரமேஸ்வரன் முதல் பாதியில் கவலையின்றி சுற்றித் திரியும் காதல் பறiவாக வலம் வந்து பின்னர் யதார்த்த உலகை புரிந்து கொண்டு பிரிந்து செல்லும் இடத்திலும், தன் முன்னாள் காதலனின் படிப்பிற்காக பெரு முயற்சிகள் செய்து ஜெயிக்க வைக்க எடுக்கும் முயற்சிகள் என்று இரண்டாம் பாதியில் அனுபவ நடிப்பு கை கொடுத்துள்ளது.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் காயடு லோஹர், கவர்ச்சி மற்றும் நடிப்பி இரண்டையும் அளவாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார்.
படத்தில் மற்றொரு ஹீரோவாக கல்லூரி முதல்வர் மயில்வாஹனனாக நடிக்கும் மிஷ்கின் ஆரம்பம் முதல் இறுதி வரை கம்பீரமான கல்லூரியின் முதல்வராக தன்னை பிரதிபளித்திருக்கிறார். விஜே சித்து, ஹர்ஷத் கான் இருவரது காமெடிக் காட்சிகளும் அவ்வபோது சிரிக்க வைக்கிறது. இயக்குநர் கெளதம் மேனன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பி.எல்.தேனப்பன், மரியம் ஜார்ஜ், இந்துமதி என அனைவரும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நாயகனின் அப்பா அம்மாவாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான்,இந்துமதி ஆகியோர் பெருமைமிகு பெற்றோர்களின் பிரதிநிதிகள்.
படத்தின் முக்கிய பலமாக அமைந்தது லியோ ஜேம்ஸ் தான். இசையில் தனி கவனம் காட்டி எல்லா பாடல்களுமே சூப்பர்ஹிட் என்பதாலும் படத்தில் அந்த பாடல்கள் வரும் போது ரசிகர்கள் ஆர்ப்பரிப்பதை பார்க்க முடிகிறது. நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பிரம்மாண்டத்தை கொடுத்துள்ளது..
இளைஞர்களுக்கான படம் என்றாலும் குடும்பத்துடன் அனைத்து வயதினரும் ரசித்துப் பார்க்கும் வகையில் இயக்கியுள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. குறிப்பாக ஏமாற்றி முன்னேறுபவனுக்கும் உண்மையாய் உழைத்துத் தோற்கிறவனுக்குமான வித்தியாசத்தை உணர வைக்கும் இடத்தில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நிமிர்ந்து நிற்கிறார்