EMI (மாத தவணை) ; விமர்சனம்

ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்கிற அளவில் வருமானத்துக்கு அதிகமான அளவில் மாதத் தவணைத் திட்டங்களில் சிக்கிக்கொண்டால் இன்றைய நிலவரப்படி அதை வசூலிக்க வங்கிகள் எப்படி எல்லாம் மக்களைத் துன்புறுத்துகிறார்கள் என்பதைச் சொல்லும் படம் இது.

நாயகன் சதாசிவம் சின்னராஜ், நாயகி சாய் தன்யாவை கண்டதும் காதல் கொள்கிறார். காதல் கணிந்து திருமணமாகி, இல்லற வாழ்க்கையை நல்லபடியாக நடத்தி வரும் நிலையில், திடீரென்று அவருக்கு வேலை இல்லாமல் போகிறது. இதனால் மாதம் வருமானம் இல்லாதவர், தான் வாங்கிய இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவைகளுக்கான மாத தவணை கட்டமுடியாமல் எப்படி திண்டாடுகிறார் என்பதையும், மாத தவணை என்ற மாயையில் மாட்டிக்கொள்பவர்களின் பரிதாப நிலையையும், ஜனரஞ்சகமான படமாகவும், மக்களுக்கான பாடமாகவும் சொல்வதே ‘EMI’ (மாத தவணை).

தனது முதல் படத்திலேயே இயக்குனர் மற்றும் நாயகன் என்ற இரண்டு பெரும் சுமையை தூக்கி சுமந்திருக்கிறார் சதாசிவம். பலனும் நன்றாகவே கிடைத்திருக்கிறது. தனக்கு இது முதல் படம் என்பது போல் தெரியாமல் நடிப்பிலும் இயக்கத்திலும் ஒரு முத்திரையை பதித்திருக்கிறார் சதாசிவம்.

சாய் தன்யா முக்கியமான பெண்கள் பார்வையை – காதலால் தோன்றும் நிதி அழுத்தத்தையும், நல்ல மனைவியாக நின்று கணவரை ஆதரிப்பதையும் வெளிப்படுத்துகிறார்

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் பேரரசு மேடைகளில் பேசும் அளவுக்கு கூட படத்தில் பேசாதது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி வழக்கம் போல் வந்து போகிறார். நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, மாத தவணை வசூலிப்பவராக நடித்திருக்கும் சன் டிவி ஆதவன் ஆகியோரது காமெடி சிரிக்க வைக்கிறது. ஓ.ஏ.கே.சுந்தர், லொள்ளு சபா மனோகர் ஆகியோறும் முகம் காட்டுகிறார்கள்..

இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சையும், ஒளிப்பதிவாளர் பிரான்ஸிசும் படத்துக்குப் பழுதில்லாமல் வேலை பார்த்திருக்கிறார்கள்.

EMI கட்ட முடியாமல் திணறும் பல குடும்பங்களின் பக்கத்தை வெளிக்கொண்டு வந்து மக்களிடத்தில் இப்படத்தை ஒரு விழிப்புணர்வு படைப்பாகவும் படைத்திருக்கும் இயக்குனருக்கு பெரிதான பாராட்டுகள்.