இரண்டு விஷயங்கள் நமக்கு எப்போதுமே வழக்கத்தில் இல்லாதவை. ஒன்று தமிழ் சினிமாவில் சினிமா பற்றிய பின்னணியில் படங்கள் உருவாவது என்பது அபூர்வம். இன்னொரு விஷயம் எந்த ஒரு குடும்பத்திலும் ஒருவன் சினிமாவில் வேலை பார்க்க போகிறேன் அதுவும் டைரக்ஷன் பண்ணப் போகிறேன் என கிளம்பினால் குடும்பத்தில் இருக்கும் மொத்த பேரும் எதிர்ப்பது தான் வழக்கம். ஆனால் இந்த இரண்டையும் அப்படியே உல்டாவாக மாற்றினால்.. ? ஆம் அதுதான் ஃபேமிலி படம்.
நாயகன் உதய கார்த்திக் சினிமாவில் இயக்குனராக ஆசைப்படுபவர். அவரது மூத்த அண்ணன் விவேக் பிரசன்னா வக்கீலாக இருக்கிறார். இன்னொரு அண்ணன் பார்த்திபன் கால் சென்டரில் வேலை பார்க்கிறார். ஆனால் அண்ணன் தம்பி மூவரின் குணாதிசயங்கள் வெவ்வேறு என்றாலும் ஆச்சரியமாக மூவருக்கும் ஒரே ஒற்றுமை என்றால் அது சினிமா தான். உதய் கார்த்திக் ஒரு தயாரிப்பாளரை நம்பி கதை சொல்லி ஏமாந்து விட விரக்தியில் வீட்டை விட்டு கிளம்பிப் போகிறார்.
ஆனால் அண்ணன்கள் அவரை அழைத்து வந்து அவருக்காகவே படம் தயாரிக்க துவங்குகிறார்கள். கூடவே பெற்றோரும் கூட மகனுக்கு உறுதுணையாக படத்தயாரிப்பில் இறங்குகிறார்கள். அவர்கள் நினைத்ததை சாதிக்க முடிந்ததா ? மகனின் ஆசையை, தம்பியின் கனவை நிறைவேற்ற முடிந்ததா என்பது மீறி கதை.
கேட்கவே வித்தியாசமாக இருக்கிறதுதானே.. ? குடும்பமே சேர்ந்து சினிமா தயாரிக்கிறார்கள் என்பதையும் தாண்டி தன் வீட்டில் இருக்கும் ஒருவன் சினிமாவில் முன்னேற துடித்தால் அவனுக்கு எப்படி ஆதரவாக அந்த குடும்பமே நிற்கிறது என்கிற பாசப்பிணைப்பை தான் இந்த படம் முதலில் வலியுறுத்துகிறது.
நாயகன் உதய் கார்த்திக், கதையின் நாயகனாக நன்றாகவே நடித்திருக்கிறார். காதல் காட்சியாக இருக்கட்டும், வாழ்க்கையில் எந்த இடத்திலும் சோர்ந்து விடக் கூடாது என்று எண்ணி நிற்கும் இடமாக இருக்கட்டும், என ஒவ்வொரு இடத்திலும் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
நாயகனின் அண்ணனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, தம்பியின் முயற்சிகளுக்கு துணையாக நிற்கின்ற வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். மற்றொரு அண்ணனாக நடித்திருக்கும் பார்த்திபன் குமாரின் நடிப்பும் கச்சிதம்.
நாயகி சுபிக்ஷாவுக்கு காட்சிகள் குறைவு என்றாலும், வரும் காட்சிகளில் கவர்கிறார். அம்மாவாக வரும் ஸ்ரீஜா ரவி, நிஜ அம்மாக்களை நினைவுபடுத்துகிறார். நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரமும் ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்.
மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு, அனீவியின் இசை, சுதர்சனின் படத்தொகுப்பு, அஜீஷின் பின்னணி இசை என அனைத்து தொழில்நுட்ப பணியும் படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.
ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து சினிமா கனவுடன் போராடும் சராசரி இளைஞன், அறிமுக இயக்குனரின் கனவை சிதைக்கும் தயாரிப்பாளர்கள், பந்தா காட்டும் ஹீரோ, பஞ்ச் டயலாக் என்ற பெயரில் பஞ்சரான வசனங்கள் என படத்தின் முதல் பாதி வெகு ஜன ரசிகனுக்கு தெரியாத சினிமா உலகத்தை காட்டி சபாஷ் போட வைக்கிறது.
அந்தவகையில் இளைஞர்களுக்கு அவர்களது குடும்பம் துணை நின்று தோள் கொடுத்தால், அவர்கள் எதையும் எளிதாக சாதிக்க முடியும், மெசேஜ் கலந்த குடும்ப செண்டிமெண்டுடனும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் .
மொத்தத்தில் ஃபேமிலியோடு சென்று பார்க்க வேண்டிய படமாக உருவாகியிருக்கிறது இந்த ஃபேமிலி படம்.