பத்திரிகை விமர்சகரும் திரைப்பட இயக்குனருமான கேபிள் சங்கர் இயக்கியுள்ள 30 நிமிட குறுங்கதை தான் ‘ஃபெமினிஸ்ட்’ லாக்டவுன் கதைகள் என்கிற பெயரில் அதன் ஒரு முதல் எபிசோடாக இந்த குறும்படம் உருவாகியுள்ளது.
வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் இலக்கியவாதியான ஏஞ்சலினுடன் ஒரு விமர்சகராக முத்தழகனுக்கு நட்பு ஏற்படுகிறது. நாளடைவில் அது ஒரே வீட்டில் இருவரும் தங்கும் லிவின் ரிலேஷன்ஷிப்பாக மாறுகிறது. நண்பர்களாக பழகும் வரை பொங்கிய காதல் உணர்வு, ரிலேஷன்ஷிப்பிற்குள் வந்ததும் நிறம் மாறுகிறது.
இருவருக்கும் பொஸசிவ்னெஸ் உருவாகிறது. அதை இருவரும் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கமாக காட்டிக் கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் இது பிரேக்கப் வரை கொண்டு செல்கிறது. அதன்பிறகு கொரோனா முதல் அலை உருவான அந்த லாக்டவுன் காலகட்டத்தில் மீண்டும் இருவரும் சந்திக்கிறார்கள். லாக்டவுன் இருவரையும் மீண்டும் ஒரே வீட்டில் ஒன்று சேர்க்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது கிளைமாக்ஸ்.
முத்தழகன், ஏஞ்சலின் ப்ளோரா என இரண்டே கதாபாத்திரங்களை வைத்து ஒரு அழகான எலியும் பூனையுமான காதல் கதையை சுவாரசியமாக நகர்த்திக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் கேபிள் சங்கர். ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பு காதலாக மாறி. அதன்பின் ரொமான்ஸ் கூடி பார்வையாளர்களை கிளுகிளுப்பு ஏற்ற தயங்கவில்லை.
அதிலும் கதாநாயகி, நாயகனை பார்த்து “அது ஏன் முறுக்கி கொண்டு இருக்கிறது ? கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிவிடு” என்று இரட்டை அர்த்தம் தொனிக்கும் விதத்தில் பேசும் வசனத்தை திரையரங்கில் ரசிகர்கள் பார்த்திருந்தால் கிளாப்ஸ் அள்ளி இருக்கும். அது மட்டுமல்ல பல இடங்களில் இதேபோன்று நச்சென்று நறுக்குத் தெரிந்தாற்போல வசனங்களை கோர்த்திருக்கிறார் கேபிள் சங்கர்.
நாயகன் முத்தழகனை விட நடிப்பிலும் நெருக்கத்திலும் நாயகி ஏஞ்சலின் புளோரா இரண்டு படி மேலே ஏறி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்வார்களே.. அப்படியல்ல இது.. பார்த்தவர்கள் நிச்சயம் இன்னொரு முறையும் பார்ப்பார்கள். லாக் டவுன் கதைகளின் அடுத்த எபிசோடுக்காக வெயிட்டிங்.