பிசியோதெரபி மருத்துவர் பாலாஜி முருகதாஸுடன் நான்கு பெண்கள் நெருங்கி பழகுகின்றனர். திடீரென்று பாலாஜி முருகதாஸ் காணாமல் போகிறார். அவரை போலீசார் தேடுகின்றனர். போலீசாரின் விசாரணையில் அவர் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வருகிறது. பின்னர் அவர் மாயமானதன் பின்னணி என்ன? நான்கு பெண்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? என்பதே மீதி கதை.
நாகர்கோயில் காசி என்பவர் சமூகவலைதளங்கள் மூலம் இளம்பெண்களிடம் பழகி பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்தில் கைது செய்ய்ப்பட்டு ஆயுள்தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கிறார்.அவருடைய கதையை முன்னுதாரணமாகக் கொண்டு திரைப்படத்துக்கேற்ப சிற்சில மாற்றங்கள் செய்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் இந்த ஃபயர்.
பாலாஜி முருகதாஸ் காசி என்ற கதாபாத்திரத்தில் நம்பகத்தன்மையோடு இரு வேறு பரிமாணங்களில் பளிச்சிடுகிறார்.முதல் பாதி நல்ல மனம் படைத்த மருத்துவராகவும் இரண்டாம் பாதியில் காதல் மன்னனாக பல பெண்களை தன் காதல் வலையில் விழச் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் உல்லாச ஏமாற்று பேர்வழியாக கச்சிதமாக பொருந்தி வில்லனாக நடித்துள்ளார்
போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் ஜே எஸ் கே, மிடுக்காக தோன்றியிருந்தாலும், ஒரு சில இடங்களில் அசால்டாக காட்சிகளை கடத்தியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சாக்ஷி அகர்வால் அழகும் கவர்ச்சியுமாய் கதாபாத்திரத்துக்கு வலுசேர்த்துள்ளார். ரச்சிதா மகாலட்சுமி கடன் கொடுத்தவனிடம் சிக்கி படும் அவஸ்தையை நேர்த்தியாக முகத்தில் கடத்தி உள்ளார். அதிலும் ரக்ஷிதா வரும் காட்சிகளும் அவரிடம் முருகதாஸ் நடந்து கொள்ளும் முறையும் கண்டிப்பாக ஃபயர் பற்றிக் கொள்ளும் காட்சிகளாகத்தான் இருக்கிறது
சிங்கம் புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்கரவர்த்தி, அனு விக்னேஷ், பேபி மனோஜ் மற்றும் படத்தின் இயக்குநர் ஜேஎஸ்கே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்றிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் டீகே-வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜி-யின் கேமரா படுக்கையறை காட்சிகளை பார்வையாளர்களை சூடேற்றும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறது.
நல்லவர் போல் பழகும் காமுகர்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சமூக பொறுப்போடு விழிப்புணர்வுவை படம் தருகின்றது. முதல் பாதியில் மாயமான பிஸியோதெரப்பிஸ்ட், அவரை தேடும் முயற்சியில் கண்டுபிடிக்கப்படும் பாலியல் குற்றங்கள் என்று விறுவிறுப்பு அம்சங்கள் இருந்தாலும் உண்மை சம்பவத்தின் பின்னணியோ அல்லது இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்து கொள்வதற்கான வழியையோ சொல்லவில்லை. ஆனாலும் படம் பார்ப்பவர்களின் மனதில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.