கோட் ; விமர்சனம்


மங்காத்தா படம் வெளியான நாளில் இருந்தே கிட்டத்தட்ட 15 வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி தான் வெங்கட் பிரபு- விஜய் கூட்டணி. ஒரு வழியாக இத்தனை வருடம் கடந்தாலும் கூட அது நிறைவேறியுள்ளது. இந்த காத்திருப்புக்கு ரசிகர்களுக்கு பலன் கிடைத்ததா பார்க்கலாம்.

இந்திய உளவுத்துறையின் கீழ் இயங்கும் தீவிரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றும் விஜய், பணி நிமித்தமாக தாய்லாந்து செல்லும் போது தனது மனைவி சினேகா மற்றும் தனது மகனை உடன் அழைத்துச் செல்கிறார். அங்கு விஜயின் மகனை மர்ம நபர்கள் கடத்தி விடுகிறார்கள். பிள்ளையை காப்பாற்றும் முயற்சியில் விஜய் ஈடுபடும் போது, குழந்தையை கடத்தி சென்ற வாகனம் விபத்தில் சிக்கி அதில் இருந்த குழந்தைகள் இறந்து விடுகிறார்கள். பிள்ளையை பறிகொடுத்ததால் அவரை விட்டு சினேகா பிரிந்து விடுகிறார். விஜய்யும் தனது வேலையை விட்டுவிடுகிறார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது வேலை விசயமாக ரஷ்யாவுக்கு செல்லும் விஜய் இறந்து போனதாக நினைத்துக் கொண்டிருந்த தனது மகனை அங்கே உயிருடன் பார்க்கிறார். அவரை கையோடு தன்னுடன் சென்னைக்கு அழைத்து வரும் விஜய் மீண்டும் இழந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம் என நினைக்கிறார். ஆனால் அதை தொடர்ந்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் அவரை மட்டுமல்ல, படம் பார்க்கும் நமையும் நிலைகுலைய செய்கின்றன. அவை என்ன ? அதி எல்லாம் விஜய் எப்படி சமாளித்து மீள்கிறார் என்பது மீதிக்கதை.

பாசத்தால் தவிக்கும் தந்தை, வேஷத்தால் தாக்கும் மகன் என இரு வேடங்களில் இரு வேறு பரிமாணங்களில் தனித்து தெரியுமாறு தன் தோற்றத்திலும், வசன உச்சரிப்பிலும் அசத்தியுள்ளார். குறிப்பாக அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு வில்லத்தனம் செய்யும் விஜய்யை அப்ளாஸ் அள்ளுகிறார்.

விஜயுடன் பணியாற்றும் அவரது நண்பர்களாக நடித்திருக்கும் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், அஜ்மல் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள். வில்லானாக வரும் மைக் மோகன் கதாபாத்திரம் அவ்வளவாக நிறைவை தரவில்லை.

அப்பா விஜய்யின் மனைவியாக நடித்திருக்கும் சினேகா மற்றும் மகன் விஜயின் காதலியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி இருவரும் அளவாக நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி, யோகிபாபு என இரண்டு காமெடியன்கள் இருந்தும் விஜய் தான் நகைச்சுவைக்கான பொறுப்பையும் கூடுதலாக சுமந்திருக்கிறார்.

யுவன் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. அதே போல பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார் மனிதர். சித்தார்த்தின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் அனல் பறக்க வைக்கிறது.

இன்னொரு பக்கம் விஜயகாந்த் மற்றும் சின்ன வயசு விஜய்யின் வியக்க வைக்கும் ஏ.ஐ.க்கள், கென்யாவில் நடக்கும் இரயில் சண்டை பயணம், தாய்லாந்தில் துரத்தல் காட்சிகள், ரஷ்யாவில் நடக்கும் பைக் சேசிங் காட்சிகள் மற்றும் ரயில் – ஹெலிகாப்டர் த்ரில்லிங் சண்டை, பிரசாந்த்தின் நண்பன் கதாபாத்திரம், த்ரிஷா குத்தாட்டம், சிவகார்த்திகேயன் ஜாலி கேமியோ, பிரம்மாண்ட ஐ.பி.எல். கிரிக்கெட் என படம் முழுக்க ரசிகர்களுக்கு தீனி போட்டுக்கொண்டே இருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

அந்தவகையில், ரசிகர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை இந்த படம் நிறைவேற்றி விட்டது என்று சொல்லலாம்.,தனிப்பட்ட விஜய் ரசிகர்களையும் தாண்டி அனைத்து திரை ரசிகர்களின் மனதையும் இந்த படம் நிச்சயம் கவரும் .