சினிமாவில் வாரிசு நடிகர்கள் அறிமுகமாவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் திறமையும், கூடவே அதிர்ஷ்டமும் இருப்பவர்கள் தங்களுக்கென ஒரு பாதையை உருவாக்கிக்கொண்டு நிலையாக நின்றுவிடுகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷால் என பலரை கூறலாம். இந்த நிலையில் பிரபல இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்காவும் இந்த ஹிட்லிஸ்ட் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறாரா ? பார்க்கலாம்.
சிறு உயிருக்குக் கூட தீங்கு விளைவிக்கக் கூடாது என்கிற வள்ளலாரின் வழியில் வாழும் விஜய் கனிஷ்கா ஒரு மென் மனதுக்காரராக மட்டுமில்லாமல் மென் பொறியாளராகவும் இருக்கிறார். அம்மா சித்தாரா மற்றும் தங்கையுடன் நடுத்தர வாழ்வில் திருப்திகரமான வாழ்க்கை நடத்தி வரும் அவருக்கு வித்தியாசமான சோதனை ஒன்று வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் வைத்து விஜய்யின் அம்மாவையும், தங்கையையும் ஒரு மாஸ்க் அணிந்த மர்ம நபர் கடத்துகிறார்.
அவர்களை பணயமாக வைத்துக்கொண்டு இரண்டு கொலைகளை விஜய் கனிஷ்காவை செய்யச் சொல்கிறார். அப்பாவியான விஜய் கனிஷ்காவை எதற்காக அவர் கொலை செய்யச் சொல்கிறார்?, முகமூடி மனிதரிடம் சிக்கிக்கொண்ட அம்மா, தங்கையை விஜய் கனிஷ்கா எப்படி மீட்கிறார்?, அந்த முகமூடி மனிதர் யார்? என்பதை காவல்துறை அதிகாரி சரத்குமார் கண்டுபிடித்தாரா? ஆகிய கேள்விகளுக்கான விடைகள் தான் ‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் கதை.
அறிமுக நாயகன் விஜய் கனிஷ்கா, முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரம் மட்டும் இன்றி நடிப்பில் வேறுபாட்டை காண்பிக்கும் வேடத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார். குறிப்பாக வசன உச்சரிப்பு, உடல் மொழி அருமை. வேறு வழியே இல்லாமல் கொலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை முகபாவனைகளில் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.
காவல்துறை உயரதிகாரியாக நடித்திருக்கிறார், ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார். அவருடைய கதாபாத்திரம், படம் முழுவதும் பயணிப்பது போல் இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில், மர்ம மனிதனை பற்றி விவரிப்பது சுவாரசியமான திருப்புமுனை .
அபி நக்ஷத்ரா மற்றும் சித்தாராவும் தங்களுக்கான நடிப்பை அளவாக கொடுத்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றிய ஸ்மிருதி வெங்கட் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்கும் அளவிற்கான நடிப்பைக் கொடுத்திருந்தார்கள்.
மருத்துவமனை டீனாக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், வழக்கம் போல் தனது ஸ்டைலிஷான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். பாலசரவணன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி குறைவான காட்சிகள் வந்தாலும், அதில் ரசிகர்களை சிரிக்க வைத்துவிடுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே.ராம்சரண் மற்றும் இசையமைப்பாளர் சி.சத்யா ஆகியோரது பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
வழக்கமான பழிக்கு பழி வாங்கும் கதையாக இருந்தாலும் அதற்காக விவரிக்கப்படும் காரணம் மனித நேயத்தை கொண்டிருப்பது தான் பாராட்டப்பட வேண்டிய சிறப்பம்சம். யூகிக்கமுடியாத காட்சியமைப்புகளுடன், க்ளைமாக்ஸ் வரை படம் பார்ப்பவர்களை பதட்டத்துடனே வைத்திருப்பதில் இரட்டை இயக்குநர்களான சூர்யகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.