தமிழ் சினிமாவில் தெருக்கூத்து கலையை மையப்படுத்தி ம் மிக குறைவான படங்களே வந்திருக்கின்றன. அந்தவகையில் நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் அப்படி ஒரு படமாக ஜமா வந்திருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த ஜமா தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதா ? பார்க்கலாம்.
தெருக்கூத்துகளில் பெண் வேடம் போடும் நாயகன் பாரி இளவழகனுக்கு அர்ச்சுனன் உள்ளிட்ட முக்கியமான ஆண் வேடங்களை போட வேண்டும் என்பதுடன்அம்பலவாணன் ஜமா என்கிற அந்த தெருக்கூத்துக்குழுவின் குழுவுக்கே தலைமை வாத்தியாராக வேண்டும் என்பதும் லட்சியம்ஆனால் அவருக்கு பெண் வேடம் மட்டுமே ஒதுக்கும் வாத்தியார் சேத்தன் அதற்கு தடையாக நிற்கிறார். இதனால் பாரிக்கு திருமத்திற்கு பெண் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் வாத்தியார் சேத்தனின் மகள் அம்மு அபிராமி பாரியை காதலிக்கிறார். இந்த காதலையும் முடக்கி, பாரியின் இலட்சியத்தையும் முடக்க நினைக்கிறார் சேத்தன். இறுதியில் வென்றது யார் என்பது விறுவிறுப்பான மீதிக்கதை.
பெண் வேஷம் போட்டு ஆடும் ஒரு கூத்துக் கலைஞனின் பிரச்னைகள், அவனை சமூகம் பார்க்கும் விதம், அதோடு அவன் போராடுவது, அதனால் அவனுக்குள் நிகழும் உளவியல் போராட்டங்கள், அவனுடைய லட்சியம், காதல் என இது முதல் படம் என தெரியாத அளவுக்கு அனுபவம் வாய்ந்த நடிகராக ‘ஜமா’ய்த்திருக்கிறார் நடிகரும் இப்படத்தின் இயக்குனருமான பாரி இளவழகன்.
தெருக்கூத்து ஜமாவின் வாத்தியாராக தாண்டவம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேத்தன், நாயகனுக்கு இணையாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். விடுதலை படத்திற்கு பிறகு சேத்தனின் உண்மையான இன்னிங்க்ஸ் இப்போதுதான் துவங்கி இருக்கிறது என்பதை இதிலும் நிரூபித்திருக்கிறார் மனிதர்.
கோபக்கார அப்பாவையே எதிர்த்து, காதலனுக்கு ஆதரவாக நிற்கும் தைரியமான பெண்ணாக ஹீரோயின் அம்முஅபிராமியும் பல இடங்களில் கைத்தட்டல் வாங்கும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகனின் அப்பாவாக ஸ்ரீ கிருஷ்ண தயாள் தனது கூத்து கலைஞராக அர்ஜுனன் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.நாயகனின் அம்மாவாக கேவிஎன் மணிமேகலை, பூனையாக வசந்த் மாரிமுத்து, மாறனாக சிவா மாறன், கருணாவாக ஏ.கே.இளவழகன், காலா குமார் மற்றும் சில நிஜ வாழ்க்கை தெருக் கூத்து கலைஞர்கள் உட்பட அனைத்து நடிகர்களும் நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது. இளையராஜா ரிட்டர்ன்ஸ் என சொல்லும் அளவுக்கு பல இடங்களில் பின்னணி இசை சிலிர்க்க வைக்கிறது.
ஒளியமைப்பிலும், இரவுநேர கூத்துக் காட்சிகளைப் படமாக்கிய விதத்திலும் கோபால் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் கூத்து நிகழ்த்தப்படும் இடம், அது சம்பந்தமான பொருள்கள் எனஸ்ரீகாந்த் கோபாலின் கலை இயக்கமும் கூத்து உலகை உயிர்ப்போடு காட்டியிருக்கின்றன.
இதற்கு முன் நாசர் இயக்கிய அவதாரம் படத்தில் தான் கூத்துக்கலையை பற்றி அதில் உள்ள அரசியல் பற்றி ஓரளவு புரிதலோடு சொல்லியிருந்தார்கள். இதில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வாத்தியாருக்கும், சிஷ்யனுக்குமான உறவுச் சிக்கல், பெண் வேடத்திற்குப் பின்னுள்ள அரசியல், கலைக்குள் இருக்கும் பாலின பேதம், கலைக்கும் கலைஞனுக்குமான உறவு என கூத்துக்களைஞர்களின் பல பிரச்சனைகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர் பாரி இளவழகன்..
நிச்சயம் பல விருதுகளுக்கு தகுதியான ஒரு படம் தான் இந்த ‘ஜமா’.