காதல் என்பது பொதுவுடமை ; விமர்சனம்


சமீபகாலமாக ஒருபாலின காதல் பற்றி அவற்றை ஆதரிக்கும் விதமாக படங்கள் வெளிவர துவங்கியுள்ளன. அப்படி வெளியாகியுள்ள ஒரு படம் தான் இந்த ‘காதல் என்பது பொதுவுடமை’ படமும்.

நாயகி லிஜோமோல் ஜோஸ் தன் அம்மா ரோகிணியிடம் காதலிப்பதாக சொல்கிறார். முற்போக்கு சிந்தனை கொண்ட ரோகிணி மகளின் காதலுக்கு மகிழ்ச்சியாக சம்மதம் தெரிவிப்பதோடு, காதலனை வீட்டுக்கு அழைத்து வா, என்று கூறுகிறார். அம்மாவின் விருப்பப்படி லிஜோமோல் ஜோஸ் தனது காதல் துணையை அழைத்து வருகிறார்.

அவரை பார்த்ததும் அம்மா ரோகிணி அதிர்ச்சியில் உரைந்துப் போகிறார். காரணம், லிஜோமோல் ஜோஸ் காதலிப்பது ஒரு ஆண் அல்ல, அவரைப் போன்ற அனுஷா என்கிற ஒரு பெண். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரோகிணி இதை ஏற்க மறுத்து அனுஷாவை வீட்டை விட்டு விரட்டுகிறார். இதனால் கோபமடைகிறார் லிஜோ. இறுதியாக லிஜோ – அனுஷாவின் காதலை ரோகிணி ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

பாசமுள்ள தாயாக வாழ்ந்துள்ளார் ரோகிணி. கணவனை பிரிந்து தன்னுடைய லட்சியத்தை நோக்கி பயணிக்கும் பெண்ணியவாதியாக இருந்தாலும், மகளின் காதலை அறிந்து கொள்ளும் போது அதை நம்பமுடியாமல் தவிக்கும் தவிப்பு, தாயின் மனநிலையில் அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் தத்ரூபமாக உணர்ச்சிகளின் குவியலாக அனுபவ நடிப்பால் மெய் சிலிர்க்க வைக்கிறார்.

மிகவும் மாறுபட்ட வேடமேற்றிருக்கும் நாயகி லிஜோமோல் அதற்கேற்ப நடித்திருக்கிறார்.இயல்பான காதலுக்கே எதிர்ப்பு வரும் எனும்போது இந்தக் காதலுக்கு எவ்வளவு எதிர்ப்புகள் இருக்கும்? அதைச் சிறப்பாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.

நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் வினித், இன்றைய பெற்றோர்களின் மனநிலையை பிரதிபலித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் பிரகாசமாக தெரிகிறார் நடிகர் வினித். கதாபாத்திரத்தை நன்றாக உணர்ந்து கொண்டு வசனங்களை கடத்திய விதம் அருமை.

கண்ணன் நாராயணின் இசை, ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு, டேனி சார்லஸின் படத்தொகுப்பு, ஆறுசாமியின் கலை, உமாதேவியின் பாடல் வரிகள் அனைத்தும் கதைக்களத்தில் இருந்து சிறிதளவும் விளாகமல் பயணித்திருக்கிறது.

தமிழ் சினிமாவுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் இது ஒரு புதுசு ஆனால் வித்தியாசமான திரைக்கதை நம்மை ஈர்க்க வைக்கிறது. அதோடு நம்மை சிந்திக்கவும் வைக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், தன் பாலினச் சேர்க்கை என்பது உடல் தேவை அல்ல உணரவேண்டிய மனிதர்களின் உணர்ச்சி, என்பதை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார்.
.