கடைசி உலகப் போர் ; விமர்சனம்

2029ல் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள கதை இது. உலக நாடுகள் இரண்டாகப் பிரிந்து மூன்றாம் உலகப்போரை நடத்திக் கொண்டிருக்கின்றன.அதைத் தமிழ்நாட்டில் இருக்கும் ஹிப்ஹாப் ஆதி கடைசி உலகப் போராக மாற்ற முயல்கிறார்.அவர் முயற்சி வென்றதா? இல்லையா? என்பதே படம்.

எதுவும் இல்லாத போது மனிதர்கள் ஒற்றுமையாக இருப்பது போல், அனைத்தும் இருக்கும் போதும் இருந்தால் எப்படி இருக்கும்!, என்ற மகத்தான கற்பனையை கருவாக வைத்துக்கொண்டு மூன்றாம் உலகப் போர் பின்னணியில், உள்ளூர் முதல் உலக அரசியல் வரை பேசியிருக்கும் ஹிப் ஹாப் ஆதியின் வித்தியாசமான முயற்சி தான் ‘கடைசி உலகப் போர்’.

கதையின் நாயகனாய் தமிழரசன் என்னும் கதாபாத்திரத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ளார் அவரது முந்தய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவரை இந்த படத்தில் காண முடிகிறது. புதிய கதைக்களத்தில் புதிய பாணியில் அவரும் நிறைவாக நடித்துள்ளார்.

கிங்மேக்கர் நடராஜ் மனசாட்சியே இல்லாத ஒருவராக படத்தின் பெரும் பகுதியையும், உலக போர் சூழலையும் புரியும்படி தன் சொந்தக் குரலில் விவரித்து, தன்னுடைய அரசியல் சாணக்கியத்தனத்தையும் இடையே புகுத்தி நடித்துள்ளார். அவருக்காகவே நன்றாக எழுதப்பட்ட வசனங்கள், நையாண்டியின் சாயல் மற்றும் அற்புதமான நடிப்பால் மனதை திருடுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அனகாவின் முகத்தில் தெரியும் முதிர்ச்சி, நடிப்பிலும் தெரிகிறது. கொடுத்த வேலை குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.

புலிப்பாண்டி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம்புலி, ஹரீஷ் உத்தமன், கல்யாண், என பெரும் நட்சத்திர பட்டாளம், அவரவர்கள் வரும் காட்சிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்

படத்தின் ஒட்டுமொத்த பொழுதுபோக்கை உறுதி செய்வதில் ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை பெரும் பங்கு வகிக்கிறது. அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உடன் இணைந்து திரையில் பிரமாண்டமான மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறது.

போரே வேண்டாம் எனும் கருத்தைச் சொல்வதற்காக இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆதியின் இந்த நல்ல உள்ளத்தை நிச்சயம் பாராட்டினாலும், அவர் சொல்ல வருவதை மக்கள் சரியாக புரிந்துக் கொள்ளாதபடி திரைக்கதையில் பல விசயங்களை திணித்திருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. அதேசமயம் பாட்டு, நடனம், நகைச்சுவை என்ற தனது வழக்கமான பாணியை தவிர்த்து, சமூக பொறுப்புணர்வோடு தனது முதல் படத்தை தயாரித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதியின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு முதலில் ஒரு சபாஷ் போடலாம்.