கிபி 2898 ஆம் ஆண்டில் உலகம் எப்படி இருக்கும்? என்கிற கற்பனையில் காம்ப்ளக்ஸ் என்கிற உலகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
மகாபாராத போரில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. இக்கதையில், அஸ்வத்மனுக்கு சாபம் விடுக்கிறார் கிருஷ்ணர். இந்த சாபம் நீங்க வேண்டும் என்றால் பல வருடங்கள் காத்திருக்க வேண்டுமென்றும் கூறிவிடுகிறார். அதுவரை அஸ்வத்மனுக்கு அழிவில்லை என்றும் கூறி விடுகிறார்.
பூமியின் வளமான விஷயங்களை உள்ளடக்கிய உலகின் கடைசி நகரத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி காசியில் உருவாக்கி அதற்கு ‘காம்ப்ளக்ஸ் ‘ என்று பெயரிட்டு சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்சுடன் வாழ்ந்து வரும் சர்வாதிகாரி சுப்ரீம் யாஷ்கின் என்கிற கமல், அவருடைய விஞ்ஞான கூடத்தில் கர்ப்பிணிப் பெண்களின் உடலில் இருந்து பெறப்படும் ஒரு சீரத்தை கொண்டு இளமையைப் பெறும் முயற்சியில் இருக்கிறார்.
இன்னொரு பக்கம் காம்ப்ளக்ஸ்க்குள் நுழைவதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு வாழும் பிரபாஸ், அதை அடைய வேண்டுமானால் நிறைய யூனிட்டுகள் பெற வேண்டும் என்கிற நிர்பந்தத்தில் எந்த வேலையும் செய்யத் தயாராக இருக்கும் வலிமை பெற்றவராக இருக்கிறார்
கிருஷ்ணரிடம் சாபம் வாங்கிய அஸ்வத்தாமன் அந்த சாபத்தை போக்க கலியுகத்தில் கல்கி அவதாரம் எடுக்கவுள்ள விஷ்ணு பகவானை சுமக்கும் தீபிகா படுகோனை வில்லன் கமலிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
தீபிகா படுகோனை பிடித்துக் கொடுத்தால் காம்ப்ளக்ஸுக்கு சென்று விடலாம் என திட்டமிடும் பிரபாஸ் ரகசியமாக ஷாம்பாலா எனும் இடத்தில் பசுபதி மற்றும் ஷோபனாவின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருக்கும் தீபிகா படுகோனை காட்டிக் கொடுக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
படத்தில் நாயகன் அந்தஸ்த்தில் பிரபாஸ் நடித்திருந்தாலும், அவர் ஒரு சாதாரண கதாபாத்திரமாகவே வலம் வருகிறார். நாயகனான ஜொலித்திருக்கிறார் அமிதாப் பச்சன் என்றே சொல்லலாம். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றி ஒட்டுமொத்த கதையின் மூலத்தையும் தாங்கி நிற்கிறார்.
க்ளைமாக்ஸ் காட்சிகளில் மட்டுமே பிரபாஸின் வீர தீர சாகச ஹீரோயிசம் தென்படுகிறது. பத்து நிமிட காட்சி என்றாலும், அதை திறமையாக கையாண்டிருக்கிறார் கமல்ஹாசன். உலகநாயகனாக இவரது தோற்றமும் அனைவரையும் கவரும். இவரது கதாபாத்திரமும் இரண்டாம் பாகத்தில் தான், பெரிதளவில் வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெய்வ குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக நடித்திருக்கும் தீபிகா படுகோனே, அஸ்வத்தாமாவாக நடித்திருக்கும் அமிதாப் பச்சன், பசுபதி ஆகியோருடன் இயக்குநர்கள் ராம்கோபால் வர்மா, எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் நாக் அஸ்வின்.வெறுமனே நவீன கதையைச் சொன்னால் அது ஒட்டாமல் போய்விடும் என நினைத்து மகாபாரதக் கதையின் நீட்சியாகச் சொல்ல முயன்றிருக்கிறார். அறிவியல் அதிசயங்களோடு தொடங்கும் முதல் பாதி படம் சற்று தடுமாற்றத்துடன் நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் படத்தை ரசிக்க வைக்கிறது. அதே சமயம், படத்தின் பல காட்சிகள் இது அறிவியல் படம் அல்ல ஆன்மீக படம் என்பதை நிரூபித்திருப்பதோடு, அறிவியலுக்கும், ஆன்மீகத்திற்கும் இரண்டாம் பாகத்தில் கடுமையான யுத்தம் நடக்கப் போகிறது, என்பதையும் விளக்கியிருக்கிறது