சத்தியமங்கலம் வனப்பகுதி அருகே இருக்கும் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். இவர் தனது நண்பர் தீனாவுடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகள் செய்துக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிறார்கள். Forest Officer ஆக வேண்டும் என்பது விருப்பம்.ஜி.வி.பிரகாஷும் தீனாவும் மற்றொரு ஊருக்கு சென்று திருடும் நேரத்தில் நாயகி இவானா அவர்களை போலீசில் சிக்க வைத்து விடுகிறார். இதிலிருந்து இவானா மீது காதல் வயப்படுகிறார் ஜி.வி.பிரகாஷ்.நர்சிங் கோர்ஸ் படிக்கும் இவானா, ஜி.வி.பிரகாஷ் திருட்டு தொழில் செய்வதால் அவரது காதலை ஏற்க மறுக்கிறார். இந்நிலையில் இவானா முதியோர் இல்லத்தில் அன்பாக பழகி வரும் பாரதிராஜாவை ஜி.வி.பிரகாஷ் தத்தெடுக்கிறார்.
காதலுக்காக தான் ஆதரவற்ற முதியவரை ஜி.வி.பிரகாஷ் குமார் தத்தெடுத்தார், என்று அவரது நண்பர் நினைக்கும் போது. தத்தெடுப்புக்கு பின்னணியில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் அதிர்ச்சியளிக்கும் திட்டம் பற்றி தெரிய வருகிறது. அது என்ன? என்பதையும், அவரது திட்டமும், காதலும் நிறைவேறியதா? என்பதை சொல்வது தான் ‘கள்வன்’.
திருடன்,குடிகாரன்,பொறுப்பற்றவன் ஆகிய பாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.கொங்குத் தமிழ் பேசுவதும் கொஞ்சம் எதிர்மறை வேடமேற்றிருப்பதும் புதிதாக இருக்கிறது.அதையும் நிறைவாகச் செய்திருக்கிறார். ஊதாரியாக சுற்றி வந்தாலும், காதல் தோல்வியால் கலங்கும் இடத்திலும், முதியவரை தத்தெடுத்து அதன் மூலம் ஆதாயம் தேடுவதற்கான திட்டம் போடும் போதும் நடிப்பில் வித்தியாசத்தை காட்டி மிரள வைக்கிறார்.
பாலாமணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவானா, தனது வசீகரமான முகத்தோற்றத்தின் மூலமும், சிறப்பான நடிப்பின் மூலமும் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்.ஜிவி பிரகாஷை சட்டை செய்யாத போதும், தன் வீட்டிற்குத் திருட வந்த அவர்களை மாட்டி விடும் போதும் க்ளைமாக்ஸில்,பதறியபடி பாரதிராஜாவைத் தேடி ஓடும் காட்சியிலும் அவர் நடிப்பில் பளிச் காட்சிகள்.
பாரதிராஜாவைச் சொல்லியே ஆக வேண்டும். அவருக்கென்று தனியாக ஒரு குளோசப் அறிமுகம் எல்லாம் கொடுக்காமல் சர்வ சாதாரணமாக பாஸிங் ஷாட்டில் ஒரு அறிமுகம் கொடுத்திருக்கும் இயக்குனரின் தைரியம் வியக்க வைக்கிறது.
ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் தினா, படம் முழுவதும் பயணிக்கிறார். அவ்வபோது சில வார்த்தைகள் மற்றும் தனது வழக்கமான பாணியின் மூலமாக சிரிக்க வைப்பவர், குணச்சித்திர நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஊர் தலைவர் மற்றும் ஊர் மக்கள், வனத்துறை அதிகாரிகள், வனக்காவலர்கள் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் புத்துணர்ச்சியை கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ரேவாவின் பின்னணி இசை கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
வனப்பகுதி, அதையொட்டியுள்ள கிராமம்,யானைகள் நடமாட்டம் என இயற்கை சூழ்ந்த வெளியை கதைக்களமாக்கி அதற்கேற்ற சுவாரசியமான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் பி.வி.சங்கர்.அவரே படத்துக்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் என்பதால் சர்வ சுதந்திரமாகச் செயல்பட்டிருக்கிறார்.அதனால் காட்சிகளில் இனிமை நிறைந்திருக்கிறது. மேலும் காதல், துரோகம், தவிப்பு, பாசம் என அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்கிய அழகான ஒரு கதையை, பசுமை நிறைந்த வனப்பகுதியின் பின்னணியில் மிக இயல்பாக சொல்லி இருப்பதற்காக இயக்குனரை தாரளமாக பாராட்டலாம்.