கிங்ஸ்டன் – திரைப்பட விமர்சனம்


மீனவ கிராமத்தில் இருக்கும் ஜிவி பிரகாஷ் தாமஸ் என்பவரிடம் வேலை செய்து வருகிறார். அந்த ஊரில் இருக்கும் மக்கள் அனைவரும் கடலுக்கு செல்லாமல் கிடைத்த வேலையை செய்து பிழைப்பை ஓட்டி வருகின்றனர். காரணம், பேராசை பிடித்த ஒருவரது ஆன்மா அந்த கடலை ஆட்கொண்டு அங்கு வருபவர்களை கொன்று குவிப்பது தான்.

இதனால், அந்த ஊர் மக்கள் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும் வேலைகளை செய்கிறார்கள். தனது கிராம எல்லைக்குள் இருக்கும் கடலுக்குள் சென்று அங்கு அமானுஷ்யம் என்ற ஒன்று இல்லை என்று நிரூபிக்க தனது நண்பர்களோடு கடலுக்குச் செல்கிறார் ஜி வி பிரகாஷ். உடன் ஜி வி பிரகாஷின் காதலியான திவ்ய பாரதியும் செல்கிறார். அவர் உயிருடன் திரும்பினாரா ? அல்லது ஊர் நம்புவது போல் பிணமாக திரும்பினாரா ? என்பது மீதிக்கதை.

கெத்தான மீனவ இளைஞன் கிங்ஸ்டனாக…. தோற்றம் , ஆட்டம் , நடிப்பு என்று உற்சாகமாக வளைய வருகிறார் ஜி வி பிரகாஷ்குமார். ஒட்டுமொத்த கதையையும் தனி ஒருவனாக தோளில் சுமந்து சென்றிருக்கிறார் ஜி வி பிரகாஷ்.

நாயகி திவ்யாபாரதிக்குத் திரைக்கதையில் பெரிய வேலையில்லை என்றாலும் கிடைத்திருக்கிற வாய்ப்பில் தன் அழகையும் இளமையையும் வெளிப்படுத்தி இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இருக்கிறார்.

அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

கோகுல் பினாய், கடலின் அழகு, ஆபத்து மற்றும் பிரமாண்டம் என அனைத்தையும் திரையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார். ஜி வி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இரண்டும் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

கமல் பிரகாஷ் எழுதி இயக்கியிருக்கிறார்.கடலுக்குள் நடக்கும் திகில் கதைக்குத் தேவையான அம்சங்களைச் சரியாகத் திட்டமிட்டிருக்கிறார். முதல் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. கதை வித்தியாசமாக இருந்தாலும் திரைகதையில் அந்த உணர்வை கொண்டுவர தவறி இருக்கிறார் இயக்குனர்.