கூரன் ; விமர்சனம்


நாய் தன் குட்டியுடன் ரோட்டில் வரும்போது குடித்துவிட்டு வண்டி ஓட்டி குட்டி நாய் மீது ஏற்றி கொன்று விடுகிறான். தன் குட்டி இறந்ததற்கு நியாயம் கேட்டு கோர்ட்டுக்கு போகும் தாய் நாயின் கதையே கூரன்.

கதை சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும் அதற்குத் திரைக்கதை வடிவமைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது திரைக்கதை வசனம் எழுதி நடித்து எஸ்.ஏ.சிக்கு மட்டுமே தெரியும்.

கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் வயதுக்கு ஏற்ற வேடத்தில் கூர்மையாக நடித்திருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல் மொழி என அனைத்திலும் நிதானமாக செயல்பட்டிருப்பவர் நாய் பக்கம் இருக்கும் நியாயத்தை படம் பார்ப்பவர்களிடமும் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

இந்தக் கூரன் படத்தில் திரைக்கதை வசனத்தின் மூலம் சட்டம் என்பது சாதாரண மனிதனுக்கு சொந்தம் அல்ல, உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் சட்டம் பொதுவானது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். நமது உணர்வுகளை விலங்குகள் புரிந்து கொள்வதாகத் தான் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தில், விலங்கின் உணர்வை மனிதர்கள் புரிந்துகொண்டு செயல்படுவது போல வித்தியாசமான கோணத்தில் கதையை அமைத்து இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் மார்டின் தன்ராஜ் கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, நாயின் நடவடிக்கைகளை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது

படத்தின் கதை தொடங்கிச் செல்லச் செல்ல ஒரு நாயின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் சென்று சேரும்படி எப்படிக் காட்டுவார்கள் என்கிற ஒரு கேள்வி நமக்குள்ளே எழுகிறது. ஆனால் போகப் போக அடுத்தடுத்த காட்சிகளில் அதற்குரிய பதில் கிடைத்து விடுகிறது. நிதின்வேமுபதி இயக்கியிருக்கிறார்.இப்படி ஒரு மையக்கதையை எழுதியதற்காகவே அவரைப் பாராட்டலாம்.