யோகிபாபு அரசியல்வாதி.அவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.இந்நிலையில்,வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணுடன் உறவாடுகிறார்.அவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அதனால் அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள். அவரது மகன் தனது தந்தையைப் போல் தானும் அரசியல்வாதியாகி ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற ஆசையோடு வளர்கிறார்.
மூத்த மனைவியின் மகனும் அரசியலில் தந்தையை விட பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். இவர்கள் நினைத்தது போல் இவர்களது எதிர்காலம் அமைந்ததா?, இல்லையா? என்பதை தமிழக அரசியலையும், குடும்ப அரசியலையும் மையமாக வைத்துக் கொண்டு நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’.
படத்தில் யோகி பாபுதான் நாயகன் என்பதைப் போல போஸ்டர்கள் பறைசாற்றினாலும் படத்தில் அவர் வருகின்ற காட்சிகள் குறைந்த நேரம்தான். அதனால் அவருடைய கதாப்பாத்திரத்தின் மீது எந்த ஈர்ப்பும் வரவில்லை. சில இடங்களில் சிரிப்பு மிஸ்ஸிங்.
ஆளுங்கட்சி தலைவராக முதல்வராக செந்தில். அரசியல் சூட்சுமத்தை சிரித்தபடியே கையாளும் காட்சிகள் எல்லாம் அவரது நடிப்பு அனுபவத்தை சொல்லாமல் சொல்லுகின்றன.
கதையின் நிஜ நாயகர்கள், சிறுவர்களான இமய வர்மன் மற்றும் அத்வைத் ஜெய் மஸ்தான். இருவரும் அதிரவைக்கிறார்கள். வயதுக்கு மீறிய வசனங்கள்தான் குறை. மற்றபடி ரசிக்க வைக்கிறார்கள்.
சுப்பு பஞ்சு, சித்ராலட்சுமணன்,மயில்சாமி உள்ளிட்டோரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். லிஸி ஆண்டனி வழக்கம்போல் இந்தப்படத்திலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதித்திருக்கிறார்.
சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவிலும் குறையில்லை.
அண்மையில் மறைந்துவிட்ட சங்கர் தயாள் இயக்கியிருக்கிறார். அவருடைய முந்தைய படமான சகுனியைப் போலவே இந்தப்படத்திலும் சமகால அரசியல் நிகழ்வுகளை வைத்து அவர் செய்திருக்கும் நையாண்டிகள் சிரிக்க வைக்கின்றன. பள்ளியிலேயே அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை சிறுவர்கள் மூலம் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்.
சிறுவர்களிடம் வேலை வாங்கிய விதம் மற்றும் பள்ளி மாணவர் தலைவர் தேர்தல் மூலம் அவர்களுக்கிடையே ஏற்படும் போட்டி, அதில் நடக்கும் சதி, ஏமாற்றம், அதை தொடர்ந்து இரண்டு சிறுவர்களின் அரசியல் எதிர்காலம் ஆகியவற்றை நகைச்சுவையாக சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் என்.சங்கர் தயாள்.