நாயகன் மணிகண்டனும் நாயகி சான்வி மேக்னாவும் காதலித்து சாதிகடந்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.அதனால் நிறைய எள்ளல்கள் வசவுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அவற்றைத் தாண்டி வாழ்ந்து சாதிக்க வேண்டும் என்கிற முனையும் நேரத்தில் வேலை இழப்பு,கடன் உள்ளிட்ட பல சிக்கல்களைச் சந்திக்க நேருகிறது.அவை என்ன? அவற்றிலிருந்து மீண்டார்களா? என்னவெல்லாம் நடந்தன என்பதைச் சொல்வதுதான் படம்
பக்கத்து வீட்டு பையன் போன்ற எதார்த்தமான நடிப்புடன் மணிகண்டன் கதைக்கு உயிர் கொடுத்துள்ளார். கடன் வாங்கிவிட்டு தவிப்பதில் தொடங்கி எல்லாமே கலகலப்பு தான். ஒரு சில காட்சிகள் சீரியஸாக இருந்தாலும் மீண்டும் கதை கலகலப்பாக மாறிவிடுகிறது. இதில் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தேர்வும் கச்சிதமாக பொருந்தியுள்ளது
நாயகியாக நடித்திருக்கும் சாவ்னி மேகனா. முதல் காட்சியிலிருந்து கடைசிவரையிலும் அவருடைய நடிப்பும் ஒரு பக்கம் இந்த படத்தை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது
பெற்றோர்களாக நடித்திருந்த ஆர் சுந்தர்ராஜன், மலையாள நடிகை குடாசாநத் கணக்கம் இருவரும் தங்களது கேரக்டர்களை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள். அக்காவாக நடித்த நிவேதிதா ராஜப்பன் மாமாவாக நடித்திருந்த குரு சோம சுந்தரம், நண்பனாக நடித்தவர், ஓனராக நடித்த பாலாஜி சக்திவேல் என படத்தின் கேரக்டர்கள் எதுவும் சோடை போகவில்லை.
ஒளிப்பதிவாளர் சுஜித் என்.சுப்பிரமணியத்தின் கேமரா கதாபாத்திரங்களை இயல்புத்தன்மை மாறாமல் காட்சிகளை படமாக்கியிருப்பதோடு, அவர்களின் உடல் மொழியை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி, அதில் இருக்கும் நகைச்சுவை உணர்வுகளை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது. வைசாக் இசையில் பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் சுவையாக இருக்கிறது. பின்னணி இசை திரைக்கதையை மேம்படுத்தப் பயன்பட்டிருக்கிறது.
தினம் தினம் தன் குடும்பத்திற்காக தேவைப்படும் பணத்திற்காக நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொரு ஆணும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இயல்பு தன்மை மாறாமல் ராஜேஷ்வர் காளிசாமி ரசிக்கும் குடும்ப படமாக படத்தை இயக்கியுள்ளார். குடும்பஸ்தன்களின் கஷ்டங்களை காமெடியாக சொல்லி சிரிக்க வைத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.