குலசாமி ; விமர்சனம்

இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் விமல், தன்யா ஹோப், வினோதினி, கீர்த்தனா, போஸ் வெங்கட், முத்து பாண்டி, உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி இன்று திரை கண்ட திரைப்படம் தான் “குலசாமி”.

தமிழ்நாட்டிலேயே பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் இடம் பிடித்த தனது தங்கையை மருத்துவராக்கத் துடிக்கிறார் விமல். அதற்காக, அக்கிராமத்தினரே செலவு செய்து விமல் தங்கையை படிக்க வைக்கிறார்கள். ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் சென்று தனது தங்கையை சேர்க்கிறார். கல்லூரி அருகிலேயே ஆட்டோ ஓட்டி வருகிறார் விமல்.

கல்லூரியில் படிக்க வந்து, கட்டணம் செலுத்த முடியாமல் இருக்கும் சில பெண்களுக்கு உதவுவது போல் உதவிக்கரம் நீட்டி விட்டு, பின் அவர்களை வைத்து பிராத்தல் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறது ஒரு கும்பல். அக்கும்பலிடம், பல கல்லூரி பெண்கள் சிக்கிக் கொள்கின்றனர். அந்த வரிசையில் விமலின் தங்கையை சிக்க வைக்க நினைக்கிறார்கள். இந்த சூழலில் விமலின் தங்கைக்கு பிரச்சனை வருகிறது, விமல் என்ன செய்தார் தங்கைக்கு என்ன ஆனது என்பதே மீதிக் கதை.

வழக்கம்போல் விமல் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை கவர்ந்திருக்கிறார். முதல் முறையாக ஒரு ஆக்சன் படத்தில் விமல் நடித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

கதாநாயகியாக வரும் தான்யா ஹோப், தங்கையாக வரும் கீர்த்தனா, கல்லூரி பேராசிரியராக வரும் வினோதினி, போலீஸ் அதிகாரியாக வரும் போஸ் வெங்கட், என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பெண்களை தொட்டாலோ அல்லது அவர்களின் அனுமதி இன்றி பாலியல் சீண்டலில் ஈடுபட்டாலோ அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனை மிகக் கொடூரமானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் சமரசம் இல்லாமல் தீர்ப்பை தீர்க்கமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவண சக்தி.

படத்தின் திரைக்கதையில் இயக்குனராக சரவண சக்தி வென்றிருக்கிறார். பல படங்களில் பார்த்த ஒரு கதையையே கொடுத்து வழக்கமான படம் தானா என்று கடந்து செல்லும் படியாக நம்மையும் கடந்து செல்ல வைத்து விட்டார் இயக்குனர்.