L2: எம்புரான் ; விமர்சனம்


பிரபல மலையாள நடிகர் பிரித்திவிராஜ் கடந்த 2019ல் இயக்குனராக மாறி மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கினார். முதல் படமே ஹிட்டாக அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் வெளியாகியுள்ளது.

கடந்த பாகத்தில் கேரள அரசியல் கட்சிகள் இடையே அதிகாரத்தைக் கைப்பற்ற எல்லா வழிகளிலும் முயற்சிக்கும் முரணைத் தடுத்து நிறுத்த, தன் காட் ஃபாதர் ஆன … மரணித்த நிலையில் அவரது மகனான டோவினோ தாமசை முதல்வர் ஆக்கினார் மோகன்லால். இதில், மோகன்லால் மூலம் முதல்வரான டோவினோ தாமஸ், மதத்தை வைத்து அரசியல் செய்யும் தேசிய கட்சி ஒன்றுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதால் மீண்டும் கேரள அரசியலில் குழப்பம் ஏற்படுவதோடு, மாநிலத்திற்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. இதனால், மீண்டும் கேரளா வரும் மோகன்லால், தனது அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதையும், அவரது சர்வதேச மாஃபியா வாழ்க்கையையும் விரிவாக சொல்வது தான் ‘எல்2 : எம்புரான்’

சர்வதேச மாபியா சந்தைக்கு கோட்டு சூட்டும், உள்ளூர் பிரச்சனைக்கு வேட்டியும் என மோகன்லால் முதல் பாகத்தை காட்டிலும் இதில் படு ஸ்டைலிஷ் ஆக இருக்கிறார். நடிப்புக்கு வேலை இல்லையென்றாலும் படம் முழுக்க தனது ஆளுமையை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறார்.

பிருத்விராஜ் சுகமாரன் இறுதிக் காட்சிகளில் வந்து தன் நீண்ட கால சபதத்தை தீர்த்துக் கொள்ளும் இடத்திலும், சண்டைக் காட்சிகளிலும் மாஸ் காட்டியுள்ளார்.

கேரள முதல்வராக வரும் டோவினோ தாமஸ் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. நல்லவர் என்றாலும் அவர் பார்க்கும் பார்வை சரியாக இருக்கிறது – கெட்டவர் என்றாலும் அதே பார்வையில் வேறுபடுத்திக் காட்டி விடுகிறார்.

மஞ்சு வாரியர் தம்பியை எதிர்த்து அரசியல் செய்யும் அக்காவாக, பக்காவாக அரசியல் வசனம் பேசி அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பிருத்விராஜின் கதாபாத்திரம் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்’ஆக இருந்தது கதைக்களத்தை மேலும் சுவாரஸ்யமாக்கிவிட்டது.

ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் வெளிநாட்டு காட்சிகளை கையாண்ட விதம் ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. இசையமைப்பாளர் தீபக் தேவின் பின்னணி இசை மாஸான காட்சிகளுக்கு உயிரோட்டம் அளிக்கிறது.

படம் முழுவதையும் மிக பிரமாண்டமாக கையாண்டிருக்கும் இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், தற்போதைய கேரள அரசியல் மற்றும் தேசிய அரசியலையும், மத பிரச்சனைகளையும் மிக சாமர்த்தியமாக கையாண்டு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார். படத்தின் ஆதாரமான கதையில் எமோஷ்னல் கனெக்டிங் இல்லை. வெற்று பிரம்மாண்டத்தை மட்டுமே எவ்வளவு நேரம் ரசிக்க முடியும். படத்தின் முதல் பாதி ஆங்காங்கே சற்று நம்மை சோதித்தாலும், இரண்டாம் பாதி டாப் கியர் போட்டு வேகமெடுத்துச் செல்வது படத்திற்கு பலமாக இருக்கிறது