லால் சலாம் ; விமர்சனம்


அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் இந்து, இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றாக இணைந்து விளையாடிய கிரிக்கெட் குழு ஒருகட்டத்தில் மத ரீதியாக பிளவுபட்டு இரண்டாக பிரிகிறது. ஒவ்வொரு ஆட்டமும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவது போல மாறுகிறது. இதனால் மொய்தீன் பாய் (ரஜினி) மகனான விக்ராந்த், அவரது நண்பரின் மகனான விஷ்ணு விஷால் இருவரும் பகையாளிகளாக மாறுகின்றனர்.

விக்ராந்துக்கு தேசிய அளவில் விளையாடும் வாய்ப்பு தேடிவரும் வேளையில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட்டில் ஏற்பட்ட மோதலால் விஷ்ணு விஷாலின் தாக்குதலில் அவரது வலதுகை துண்டாகிறது. மகனின் கிரிக்கெட் கனவு தகர்ந்ததால் ரஜினி கோபம் கொண்டரா ? இல்லை சொந்த ஊரில் பற்றி எரியும் மத நெருப்பை மத நல்லிணக்கவாதியான ரஜினி சாந்தப்படுத்தினாரா என்பது மீதிக்கதை. இதற்குள் அம்மா மகன் பாசம், தேர் திருவிழா பிரச்சனை, உள்குத்து அரசியல் ஆகியவற்றை இணைத்து கதை சொல்லியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

படத்திற்கு மிகப்பெரிய பலமாக ரஜினி(யும்) இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் அனல் பறக்கிறது. உணர்வுபூர்வமான காட்சிகளில் தன் முதிர்ச்சியான நடிப்பை வழங்கி, கதைக்கருவிற்கு அர்த்தம் சேர்த்திருக்கிறார். விஷ்ணு விஷால் நடிப்பதற்கு ஏராளமான காட்சிகள். விக்ராந்திற்கு, குறைவான காட்சிகளே கிடைத்திருக்கிறது. இருவரும் தங்களது கதாபாத்திரத்தினை உணர்ந்து, நடித்துள்ளனர் ஆனாலும் இஸ்லாமியரான விக்ராந்த், இந்து மதத்தை சேர்ந்த விஷ்ணு விஷால் மீது கோபம் கொள்ளும் காட்சிகளில் போதிய அழுத்தம் இல்லை.

செந்தில் தன் நடிப்பாலும் வசனங்களாலும் நம் மனதில் பதிகிறார். தம்பிராமையா, தனது வழக்கமான நடிப்பினை கொடுத்திருக்கிறார். விவேக் பிரசான்னா, சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனாலும் அவர் க்ளைமாக்ஸில் திருந்துவது, சினிமாவுக்கே உரிய போங்கு. ஜீவிதா, நிரோஷா இருவருமே கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மூணாறு ரமேஷுக்கு இந்தப்படம் இன்னொரு மிகப்பெரிய வெளிச்சம் என்று சொல்லலாம். தங்கதுரைக்கும் நிறைய வாய்ப்பு கிடைத்துள்ளது, பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

படத்தை பொறுத்தவரை படம் முழுக்க ஏ.ஆர் ரகுமானின் இசை பட்டையை கிளப்பி இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறது. சந்தனக்கூடு திருவிழா, கிராமத்துக் கோயில் திருவிழா, தேர், 90களின் கிராமம் என கவனிக்க வைக்கிறார் கலை இயக்குநர் ராமு தங்கராஜ்.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. வழக்கமாக அவர் இயக்கும் படங்களை விட இந்த திரைப்படத்தில் அதிகம் கருத்துக்களையும் அட்டகாசமான திரை கதையையும் கொடுத்திருக்கிறார்.

மத நல்லிணக்கத்தை இந்த சூழலில் அற்புதமாக வலியுறுத்தியதற்காக தாராளமாக லால் சலாம் படத்திற்கு ஒரு சல்யூட் வைக்கலாம்.