இயக்குநர் ஏ. வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா, பிரபு மற்றும் ரமணா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லத்தி.
லவ் டார்ச்சர் கொடுப்பதாக ஒரு இளைஞர் மீது ஒரு இளம் பெண் போலீஸில் புகார் அளிக்கிறார். அந்த பையனை எச்சரித்து அனுப்புகிறார் கான்ஸ்டபிள் முருகானந்தம் (விஷால்). அதன் பிறகு அந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் கொலை செய்யப்படுகிறார். உடனடியாக லவ் டார்ச்சர் கொடுத்த பையனை லத்தி ஸ்பெஷலிஸ்ட் விஷால் வெளுத்து வாங்க, கொலை அந்த இளைஞர் செய்யவில்லை என்பது தெரிய வருகிறது. உடனடியாக விசாரிக்காமல் அடித்து விட்டார் விஷால் என ஒரு ஆண்டு அவர் சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் சென்னையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரபல தாதா சுறாவின் மகன் வெள்ளை, டி.ஜி.பி பிரபுவின் மகளிடம் தகாத முறையில் நடந்துகொள்கிறார். இதை அவர் தனது தந்தை பிரபுவிடம் கூற, டி.ஜி.பியாக இருந்தும் தாதா மகனை பிரபுவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்த சமயத்தில் வெள்ளை தனியாக பிரபுவிடம் சிக்கிக்கொள்கிறார். வெள்ளையை அப்படியே கடத்தி யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் கொண்டு செல்கிறார் பிரபு. 6 மாதத்திற்குள்ளே விஷாலை நன்னடத்தை காரணமாக உயர் அதிகாரியான பிரபு மீண்டும் வேலையில் சேர்க்கிறார். பிரபுவின் மகளுக்கு வில்லனால் ஏற்படும் தொல்லை பற்றி தெரிய வர சீக்ரெட் ஆக வில்லனை வெளுத்து வாங்க விஷாலை நியமிக்கிறார் பிரபு. விஷாலின் முகத்தை பார்த்து விடும் வில்லன் வெள்ளை முருகானந்தத்தையும் அவரது குடும்பத்தையும் எப்படி பழி வாங்குகிறான் அதில் இருந்து விஷால் யாரை காப்பாற்றினார், இறுதியில் ஒட்டுமொத்த ரவுடிகளையும் என்ன செய்தார் என்பது தான் லத்தி படத்தின் கதை.
வழக்கம் போல் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் விஷால். ஆனால், இதுவரை செய்யாத அளவிற்கு ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். அவர் ஒருவருடைய உழைப்பு மட்டுமே படத்தை தாங்கி நிற்கிறது.
விஷாலின் மனைவியாக படத்தில் நடித்துள்ள நடிகை சுனைனா கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து முடித்து விட்டு ரசிகர்கள் மனங்களில் நிறைவை தருகிறார். வில்லனாக வரும் ரமணாவின் நடிப்பு ஓகே.
அவருடைய தந்தையாக நடித்தவர் வில்லனாக இருந்தாலும், படத்தை பார்ப்பவருக்கு வில்லனாக தெரியவில்லை. விஷாலின் குழந்தையாக நடித்த சிறுவன் நன்றாக நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
முதல் பாதி சற்று பொறுமையாக நகர்கிறது. இரண்டாம் பாதி முழுமையான ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே இடம்பெறுகிறது. சில இடங்கள் ரசிக்கும்படியான ஆக்ஷன் இருந்தாலும், பல லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது. குறிப்பாக, ஒரு மனிதனை உடலில் உள்ள பல இடங்களில் அடித்தும், கத்தியால் குத்தியும் மீண்டும் எழுந்து சண்டை போடுகிறார். இதுவே ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுக்கிறது.
விஷாலின் நடிப்பு மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இந்த படத்தில் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் அது பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் அதிரடியான சண்டைக் காட்சிகள் தான். அந்த கட்டி முடிக்காத பில்டிங்கில் கடைசி 40 நிமிடங்கள் நடைபெறும் காட்சிகள் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் என்றே சொல்லலாம்.
மொத்தத்தில் லத்தி விஷாலின் திரைப்பயணத்தில் ஒரு நல்ல படம்.