லப்பர் பந்து ; விமர்சனம்


தமிழ் சினிமாவில் கிரிக்கெட் சம்பந்தமான படங்கள் எத்த்தனையோ வந்திருக்கின்றன. இதில் கிராமத்து கிரிக்கெட் படங்களும் அடக்கம்,. ஆனால் இதுவரை வந்த படங்களில் இருந்து வித்தியாசப்பட்டு கிரிக்கெட் பின்னணியில் ஒரு படத்தை கொடுக்க முடியுமா ? முடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து

எந்த ஊரில் கிரிக்கெட் போட்டி நடந்தாலும் உடனடியாக ‘அட்ட கத்தி’ தினேஷ், விளையாட கிளம்பி விடுவார். மனைவி, குழந்தை, பெயிண்டிங் தொழில் என ஆனபின்னும் கூட்ட கிரிக்கெட் மோகம் அவரை விடவில்லை. இவரது ஆட்டத்தை பார்க்கும் பள்ளி மாணவன் ஹரிஷ் கல்யாண், அவரை பவுளிங்கால் எப்படி வீழ்த்த முடியும் என அப்போதே யோசிக்கிறான். வளர்ந்து வாலிபன் ஆனதும் திநேஷுடன் எதிரணியில் நின்று மோதும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. இது இருவருவருகுமான ஈகோ மோதலாக மாறுகிறது. இதில் இன்னொரு பக்கம் ஹரிஷ் கல்யாண் காதலிக்கும் பெண்ணான சஞ்சனா தினேஷின் மகள் என தெரிய வருகிறது. இவர்களது ஈகோவால் சஞ்சனாவை திருமணம் செய்வதில் ஹரிஷ் சிக்கலை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இந்த பிரச்சனைகளை இருவருமே எப்படி கையாண்டார்கள். ஹரிஷ்-சஞ்சனா காதலுக்கு சுப முடிவு கிடைத்ததா என்பது மீதி கதை

இதுநாள் வரை விளையாட்டு பிள்ளை போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த ’அட்ட கத்தி’ தினேஷ், திருமண வயதில் இருக்கும் ஒரு மகளுக்கு தகப்பானாக வயது முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். அவருடைய மிகவும் இயல்பான நடிப்பு அதற்கு துணை நிற்கிறது.

ஹரீஷ்கல்யாண் இளமைத்துடிப்புடன் நடித்திருக்கிறார்.அதற்கேற்ற கதாபாத்திரமும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.விளையாட்டில் பந்து வீசும்போதும் மட்டை பிடிக்கும்போதும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்.விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறும்போது பார்ப்போரையும் கலங்க வைக்கிறார்.

தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் சுவாசிகா விஜய், பல இடங்களில் தன்னை சுற்றியிருக்கும் நடிகர்களை தனது நடிப்பு மூலம் ஓரம் கட்டி விடுகிறார். தனது பார்வை மூலமாகவே தனது கோபத்தை வெளிக்காட்டுபவர், தனது வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி மூலமாக மிரட்டி விடுகிறார்.

ஹரீஷ்கல்யாணின் காதலியாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிப்பில் மிரட்டுகிறார். குறிப்பாக அப்பாவுக்கும் காதலனுக்கும் இடையே மோதல் என்பதை தெரிந்து அதைச் சமாளிக்க அவர் செயல்கள் இரசிக்க வைக்கின்றன தந்தை, காதலன் ஆகியோரிடம் கோபப்படும் இடங்களிலும் ஆச்சர்யப்படுத்துகிறார்..

விறுவிறுப்பான விளையாட்டு காட்சிகளில் நகைச்சுவையான கமெண்ட்ரி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு துணையாக நிற்கும் ரசிகர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் படத்துக்கு பலம். அதில் பாலசரவணனும் தினேஷின் நண்பராக வரும் ஜென்சன் திவாகர் படத்தின் கலகலப்புக்கு துணை நிற்கிறார்கள். காலி வெங்கட் மற்றும் அவரது தம்பியாக நடித்திருக்கும் டிஎஸ்கே இருவருமே பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா கிரிக்கெட் போட்டிகளையும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் மிக சரியான முறையில் இணைத்து ரசிகர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் லப்பர் பந்துக்கு உயிர் கொடுத்து மக்களின் மனங்களோடு உறவாட வைத்திருக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டை மையப்பத்திய கதை தான் என்றாலும், அதில் குடும்ப உறவு, காதல், சாதி பாகுபாடு, உணவு அரசியல் பற்றி பேசினாலும், அனைத்தையும் கலகலப்பாகவும், மனதுக்கு நெருக்கமாகவும் சொல்லி இருக்கும் விததத்தில் தனித்து தெரிகிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து..