1983, ஆக்சன் ஹீரோ பைஜூ போன்ற சூப்பர்ஹிட் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் அப்ரிட் ஷைனும் நிவின் பாலியும் இணைந்திருக்கும் படம் தான் மஹாவீர்யர்.
அரசர்கள் காலத்தில் நடந்த குற்றம் ஒன்றுக்கான தீர்ப்பைத் தற்போதைய நவீன நீதிமன்றம் வழங்கினால் எப்படியிருக்கும் என்ற அசாதாரண கற்பனையே இந்த மஹாவீர்யர்.
அரசர் லாலுக்கு தீராத விக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. என்ன வைத்தியம் பார்த்தும் அது குணமாகவில்லை. இதனால் விக்கல் பிரச்னை தீர்வதற்காகப் பேரழகி ஒருவரைக் கவர்ந்து வருமாறு தன் அமைச்சர் ஆசிப் அலிக்கு உத்தரவிடுகிறார்.
நிகழ்காலத்தில் அபூர்ணாநந்தன் என்னும் சாமியாராக ஊருக்குள் பிரவேசிக்கிறார் நிவின் பாலி. அருகிலிருக்கும் கோயிலின் விக்கிரகம் ஒன்றைத் திருடிவிட்டதாக அவர்மேல் குற்றம் சுமத்தப்பட, வழக்கு நீதிமன்றம் செல்கிறது. அவருக்கு எதிராக சிலர் சாட்சி சொல்ல, தனக்காக தானே வாதாடி அவர்களது சாட்சியங்களை உடைக்கிறார் நிவின்பாலி.
இந்த நேரத்தில் தான் ராஜா லால் மீது கிராமத்து பெண் கொடுத்துள்ள புகார் அதே நீதிமன்றத்துக்கு வர ராஜாவும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். நிவின்பாலியின் வழக்கு சற்று நேரம் தள்ளிவைக்கப்பட்டு ராஜாவின் வழக்கு விசாரிக்கப்படுகிறது.
ராஜா எதற்காக அந்த பெண்ணை அழைத்து வரச்சொன்னேன் என்கிற உண்மையை வெளிபடுத்துகிறார். நீதிமன்றம் அவர் சொன்ன காரணத்தை கேட்டு, அவருக்கு செய்வதற்காக அந்த இளம்பெண்ணை துன்புறுத்துகிறது. இதை காண இயலாத சாமியார் நிவின்பாலி இதற்கு ஒரு முடிவு கட்டுகிறார். இளம்பெண்ணால் தீர்க்க முடியாத பிரச்சனை என்ன ? நிவின்பாலி இந்த பிரசன்னையை எப்படி கையாண்டார் என்பதே படத்தின் மீதிக்கதை.
டைம் டிராவல், பேன்டஸி, இன்னும் பல நம்ப முடியாத மேஜிக்கெல்லாம் சேர்த்து ஒரு டார்க் காமெடி கோர்ட்ரூம் டிராமா படம் எடுத்தால் அதுதான் இந்த மஹாவீர்யர்.
சாமியார் அபூர்ணாநந்தனாக நிவின் பாலி அசத்தியிருக்கிறார். கோர்ட்டில் அவருக்காக அவர் வாதாடும் காட்சிகள் அட்டகாசம். முதல் பாதி முழுக்க அவரின் ராஜ்ஜியம் தான். ஆனால் இடைவெளிக்கு பிறகு படம் முழுக்க நீதிமன்ற பார்வையாளர்களில் ஒருவராக இருப்பது ரசிகர்களுக்கு சற்று வருத்தம் தான்.
ராஜாவாக வரும் லால் அரசனாக மிரட்டுவதும், விக்கல் பிரச்சனையால் சிரம்மப்படுவதுமாய் சிறப்பாக நடித்துள்ளார். மந்திரியாக வரும் ஆசிப் அலிக்கு நல்ல கதாப்பாத்திரம், நிவின் பாலியை விட அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார். நாயகியாக நடித்துள்ள ஷான்வி சிறப்பாக நடித்துள்ளார்.
நீதிபதியாக வரும் சித்திக், வழக்கிற்காக வரும் விவாகரத்து தம்பதி, வழக்கறிஞர் லாலு அலெக்ஸ், என பலரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் சந்துரு செல்வராஜ் இருவேறு காலத்தில் நடக்கும் காட்சிகளுக்கு நம்பும்படி உயிர்கொடுத்திருக்கிறார். சாதாரண காட்சிகளுக்குக்கூட வலிமை சேர்க்கிறது இஷான் சாப்ராவின் பின்னணி இசை.
மொத்தத்தில் இந்த மஹாவீரியர் ஒரு ஜாலியான கோர்ட்ரூம் படம்.