விஜய் ஆண்டனியால் ஒரு காலத்தில் தனது மகனை இழந்த தமிழக அமைச்சர் அவரை கொல்வதற்காக நடத்திய தாக்குதலில் விஜய் ஆண்டனியின் மனைவியும் நண்பர்களும் கொல்லப்பட, விஜய் ஆண்டனியும் அதில் இறந்து விட்டார் என பொய் செய்தியை பரப்பும் ராணுவ அதிகாரி சரத்குமார் விஜய் ஆண்டனியை காப்பாற்றி அந்தமான் தீவுக்கு அழைத்து வந்து நீ யார் என்கிற அடையாளம் தெரியாத மனிதனாக இங்கேயே உன் காலத்தை கழி என கூறி அங்கே விட்டுவிட்டு செல்கிறார்.
விஜய் ஆண்டனி மேல் பரிதாப்பட்டு அங்கே ஹோட்டல் நடத்தும் சரண்யா, அவரது மகன் பிருத்வி அம்பார் இருவரும் அவருக்கு ஆதரவளிக்கின்றனர். அந்தப்பகுதியில் வசிக்கும் மேகா ஆகாஷும் விஜய் ஆண்டனியின் செயல்களால் ஈர்க்கப்படுகிறார். அந்தப்பகுதியில் வட்டித்தொழில் நடத்தி அராஜகம் செய்யும் தனஞ்செயாவால் பிருத்வி அம்பார், மேகா ஆகாஷுக்கு பாதிப்பு ஏற்பட, அவர்களுக்கு ஆதரவாக முகம் காட்டாமல் தனஞ்செயாவுக்கு ஆட்டம் காட்டுகிறார் விஜய் ஆண்டனி. இன்னொரு பக்கம் உள்ளூர் போலீஸ் அதிகார்ரி முரளி சர்மாவுக்கும் தண்ணி காட்டுகிறார்.
ஒருகட்டத்தில் அவரது இருப்பிடம் அமைச்சருக்கு தெரியவர, அமைச்சரின் செல்வாக்கிற்கும் உயரதிகாரியின் உத்தரவுக்கும் கட்டுப்பட்டு விஜய் ஆண்டனியை நிஜமாகவே கொல்லவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார் சரத்குமார். இன்னொரு பக்கம் தனஞ்செயாவும் முரளி சர்மாவும் கைகோர்த்து விஜய் ஆண்டனியை காலி பண்ண முடிவு செய்கின்றனர். இறுதியில் என்ன ஆனது..?
விஜய் ஆண்டனி என்றால் இப்படித்தான் நடிப்பார் என ஏற்கனவே ரிஜிஸ்டர் ஆகிவிட்டதால் அதை நாம் விமர்சிக்க தேவையில்லை. அதேசமயம் வழக்கம்போல் ஆக்ஷனில் அதிரடியையும், நடிப்பில் நிதானத்தையும் வெளிப்படுத்த தவறவும் இல்லை.
வில்லனாக நடித்திருக்கும் டாலி தனன்ஜெயா, போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் முரளி சர்மா ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சரத்குமார் மற்றும் சத்யராஜ் ஆகியோரின் அனுபவமான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
நாயகி மேகா ஆகாஷ் இருக்கிறார்.அவருக்கு முக்கியத்துவம் குறைவென்றாலும் அவர் இருப்பதே ஆறுதல் என்றிருக்கிறது. சரண்யாவின் மகனாக வரும் பிருத்வி அம்பர் நடிப்பில் துள்ள காட்டினாலும் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிடுகிறது.
விஜய் மில்டனின் ஒளிப்பதிவில் ஹாலிவுட் தரம். விஜய் ஆண்டனி மற்றும் ராய் ஆகியோரின் இசையில் பாடல்கள் ஒகே தான் என்றாலும் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது.
”கெட்டவன கொல்ல கூடாது, கெட்டத தான் அழிக்கணும்” என்ற கருத்துடன் இந்தப்படத்தை கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் விஜய் மில்டன் அதை தலையை சுற்றி காதலி தொடும் விதமாக கொடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அப்படியே ரன் படத்தின் அப்பட்டம்மான தழுவல். ஆரம்பத்திலேயே விஜய் ஆண்டனி யார் என்கிற சஸ்பென்ஸ் உடைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய பலவீனம். இருந்தாலும் ஆக்சன் காட்சிகளால் படத்தை ஓரளவு ரசிக்க வைத்திருக்கிறார்.