நண்பன் ஒருவன் வந்த பிறகு ; விமர்சனம்


நாயகன் ஆனந்த் தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த் நண்பர்களுடன் சேர்ந்து சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார். ஆனால் அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டு தோல்வியில் முடிந்ததால் நண்பர்கள் மனக்கசப்புடன் பிரிகிறார்கள்.இதனால் சிங்கப்பூர் செல்லும் ஆனந்த் அங்கே வேலை செய்து இழந்ததை மீட்கிறார்.

ஊரில் இருக்கும் தனதுகாதலி கண்ணம்மாவிற்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமாகிறது என்ற தகவல் வருகிறது, அதுமட்டுமல்ல நண்பர்களின் நினைவும் அவரை ஊருக்கு இழுக்கிறது. மீண்டும் தனது ஐடியாவை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் ஊர் திரும்புகிறார் ஆனந்த். காதலியை கரம் பிடித்தாரா ? நண்பர்களுடன் இழந்த நட்பை மீட்டாரா என்பது மீதிக்கதை..

பள்ளி, கல்லூரிக் காலங்களில் நண்பர்களாக இருப்பவர்கள் அதன்பின் ஒன்றாகச் சேர்ந்து தொழில் செய்யவும் தொடங்கினால் எப்படி இருக்கும்? என்னவெல்லாம் நடக்கும்? என்பதை உண்மைக்கு மிக நெருக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

சராசரி குடும்ப இளைஞரை கண்முன் நிறுத்தி இருக்கிறார் நாயகன் அனந்த். தந்தையிடம் தன் விருப்பங்களை தெரிவிப்பது, பிறகு அவரது அறிவுரையை ஏற்று நடப்பது, தாழ்வு மனப்பான்மையில் அழுவது, காதலியை நினைத்து உருகுவது என சிறப்பாக நடித்து இருக்கிறார்.

அனந்தின் காதலியாக வரும் பவானி ஸ்ரீக்கு காட்சிகள் கொஞ்சமே என்றாலும் அழகிலும் நடிப்பிலும் கவருகிறார்.. ஆனந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் ஆர்ஜே விஜய், இர்பான், வில்ஸ்பட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ் ஆகியோர் ஓரளவு நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இவர்களில் ஆர்.ஜே.விஜய்யின் கதாபாத்திரமும் அவர் பேசும் வசனங்களும் ரசிக்க வைக்கின்றன.

நாயகன் ஆனந்த் தானே எழுதி இயக்கியிருந்தாலும் தனக்கு மட்டும் முக்கியத்துவம் இருக்கவேண்டும் என்று எண்ணாமல் திரைக்கதையில் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அந்தவகையில் ஒரு இளைஞனின் இன்ப துன்ப வாழ்வியலையும், காதலையும், நட்பையும், உணர்ச்சிகள் நிறைந்த காவியமாக அழகாக தொகுத்து மணம் வீசும் மலர் மாலையாக கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் ஆனந்த்.