நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – விமர்சனம்


நாயகன் பவிஷ் காதலில் தோல்வியடைந்தவர்.அவருடைய பெற்றோர் ஆடுகளம் நரேன் – சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் அவருக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் பார்க்கின்றனர்.அப்பெண் நாயகனின் பள்ளித் தோழி. இருவரும் பேசிப் பழகும் நேரத்தில் முன்னாள் காதலியின் திருமண அழைப்பு வருகிறது.அதன்பின் அவர் பார்த்த பெண்ணை மணந்தாரா? முன்னாள் காதலியுடன் இணைந்தாரா என்பத்க்ஹு மீதிக்கதை

நடிகர் தனுஷின் அக்கா மகன் தான் நாயகன் பவிஷ். அறிமுக காலக்கட்டங்களில் தனுஷை பார்த்தது போலவே இருக்கிறார். மகிழ்ச்சி, சோகம், அழுகை, காதல் என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் ஓரளவுக்கு ஸ்கோர் பண்ணியிருப்பவர், நடனத்தில் சபாஷ் வாங்கியிருக்கிறார்.

ஹீரோ, ஹீரோயினை தாண்டி அனைவரையும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் என்றால், அது மேத்யூ தாமஸ் நடித்த ராஜேஷ் கதாபாத்திரம்தான். நகைச்சுவை காட்சிகளில் வேற லெவல் பர்ஃபார்மென்ஸ்..

நாயகியாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன், குழந்தை தனம் மாறாத முகமாக இருந்தாலும், இறுதிக் காட்சியில் காதலுக்காக உருகி, ஏங்கும் இடங்களில் அசத்தலாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் தந்தையாக சரத்குமார் மிடுக்கும் பணக்கார திமிருடன் பேசும் தோரணை பின்னர் தன் இறுதி காலங்களில் மகளை விட்டு செல்வதை நினைத்து கலங்கும் காட்சிகளில் கண் கலங்க வைத்துவிடுகிறார். நரேன், சரண்யா பொன்வண்ணன் அனுபவ நடிப்பில் அசத்துகிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் ஒரு அற்புதமான வேலையைச் செய்து பாடல்களிலும், பின்னணி இசையிலும் மேம்பட்ட திறமையை ரசிக்கும் வண்ணம் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் பின்பாதியில் கோவாவை கண்முன் நிறுத்துகிறார்.

குறைகள் என பார்த்தால் நாயகன் பவிஷின் நடிப்பு பலவீனமாக இருக்கிறது. ஹீரோ முதல் கொண்டு எல்லோருமே பார்ப்பதற்கு பிளஸ் டூ மாணவர்கள் போல இருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணமா? என்கிற கேள்வியே படத்தின் பெரிய பலவீனம்.

தனுஷ் இயக்கிய மூன்று படங்களில் முதலிடத்தில் இப்படத்தை வைக்கும் அளவிற்கு மிக கச்சிதமான இயக்கத்தை கொடுத்திருக்கிறார். காதல் தோல்வியடைந்தாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து சென்று அடுத்த வாழ்க்கையை தேடி போய்க் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒன்றையும் பெரிதாகவே அழுத்தமாக கூறியிருக்கிறார். இன்றையை 2k கிட்ஸ்களின் மனநிலை, அவரின் காதல் வாழ்க்கை, திருமணத்தில் அவர்களின் எதிர்ப்பார்ப்பு என எல்லாவற்றையும் திரையில் பிரதிபலித்திருக்கிறார் இயக்குனர் தனுஷ்