சக மனிதர்களுடன் சகஜமாக பழகத் தெரியாத, ஒழுங்கு, சுத்தம் ஆகியவற்றில் அளவுக்கதிகமான கவனம் கொண்ட இளைஞன் அர்ஜுன் (அசோக் செல்வன்), தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றதும் மனஅழுத்தத்தில் சிக்கிக்கொள்கிறான். அதிலிருந்து மீள, மருத்துவர் கிருஷ்ணவேணி (அபிராமி), தான் எழுதிய 2 கதைகளைப் படிக்கக் கொடுக்கிறார். அதன் இறுதிப் பக்கங்கள் கிழிக்கப்பட்டிருப்பதால் முடிவைத் தெரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறான்.
மருத்துவர், அந்தக் கதைகளின் கதாபாத்திரங்கள் கொல்கத்தாவிலும் இமாச்சலப் பிரதேசத்திலும் வாழ்ந்துவருவதாகச் சொல்கிறார். தேடிச் செல்கிறான். ரயில் நிலையத்தில் அர்ஜுனை யதேச்சையாகச் சந்திக்கும் சுபத்ரா (ரிது வர்மா) அவனுடன் இணைந்துகொள்கிறாள். இந்தப் பயணத்திலிருந்து அர்ஜுனுக்கும் சுபத்ராவுக்கும் கிடைப்பது என்ன? அர்ஜுன் மன அழுத்தத்தில் இருந்து மீண்டானா? என்பது படம்.
இயல்பான மனிதர்கள் நிரம்பிய ஃபீல்குட் கதைதான் என்றாலும், அதில் மூன்று டிராக், ஒவ்வொன்றுக்கும் ஒரு சஸ்பென்ஸ், ஒரு க்ளைமாக்ஸ் என்று திரைக்கதையில் வெரைட்டி காட்டுகிறார் அறிமுக இயக்குநர் Ra.கார்த்திக்.
வீரா, அர்ஜுன், பிரபா என மூன்று பரிமாணங்களில் அசோக் செல்வன். கல்லூரி இளைஞன் ரக்கட் பாயாகவும், காவல்துறை அதிகாரியாகவும் ஸ்கோர் செய்பவர், அகவயத்தன்மை கொண்ட இன்ட்ரோவெர்ட்டாக மட்டும் ஏனோ ஈர்க்க மறுக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அவர் இன்ட்ரோவெர்ட்டா, அல்லது அவருக்கு இருப்பது பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு என்று அழைக்கப்படும் ‘Obsessive–compulsive disorder, OCD’-யா, Germaphobia-வா (கிருமிகள் குறித்த அச்சம்) என்பதிலும் சரியான தெளிவில்லை. உடல்மொழியிலும் அப்படியே ஆங்கில டிவி தொடரான ‘தி பிக் பேங் தியரி’யின் ஷெல்டன் கூப்பர் கதாபாத்திரத்தை நகலெடுக்க முயன்றிருக்கிறார். ஆனால், அந்த நகைச்சுவை பாணி நடிப்பு சுத்தமாக மிஸ்ஸிங்.
ஒரு டிராக்கில் வரும் அபர்ணா பாலமுரளிக்கு ரக்கட் கேர்ள் பாத்திரம். ‘சூரரைப் போற்று’ பொம்மியை நினைவூட்டினாலும், அவரும் அழகம்பெருமாளும்தான் அந்தக் கதையை இன்னும் ரசிக்கும்படி மாற்றியிருக்கிறார்கள். ரிது வர்மா அவரின் பாத்திரத்தைச் சிறப்பாகவே கையாண்டிருக்கிறார்.
கொஞ்சம் சறுக்கினாலும் புரியாமல் போய்விடக்கூடிய திரைக்கதை அமைப்பு மேல் வெற்றிகரமாகப் பயணித்துக் கவனிக்க வைக்கிறார் இயக்குனர்.
கோபி சுந்தரின் பாடல்களும் தரண் குமாரின் பின்னணி இசையும் ஃபீல் குட்தன்மையை அழகாகப் பிரதிபலித்து படத்துக்கு வலு சேர்க்கின்றன.
3 கதைகளுக்கும் வெவ்வேறு ஒளிகளையும் நிறங்களையும் பயன்படுத்தி அசர வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா.