ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் ; விமர்சனம்


மாநகரம் பட பாணியில் நான்கு வெவ்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகள் அவற்றை ஒன்றிணைக்கும் மையப்புள்ளி என்கிற கோணத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

பரத்- பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தன்னை நம்பி வந்த காதல் மனைவி நோயுடன் போராடும் போது அவருக்கு சத்திர சிகிச்சை செய்து பிழைக்க வைக்க லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. ஓட்டோ சாரதியான பரத் தன்னுடைய அவசரமான அவசியமான பண தேவைக்காக சட்ட விரோத காரியத்தில் ஈடுபடுகிறார்.

இதற்காக தனக்கு கிடைத்த துப்பாக்கி எனும் ஆயுதத்தை பாவிக்கவும் தயங்கவில்லை. அந்த ஆயுதத்தை பயன்படுத்தி பணத்தை சம்பாதித்து தன் மனைவியை காப்பாற்றினாரா ?இல்லையா ? என்பது ஒரு கதை.

மாநகரத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றும் அபிராமி – தன் மகனை வைத்தியராக்க வேண்டும் என்று விரும்புகிறார். மகன் தற்போது திருநங்கையாகிவிட்டாலும் அவருக்கு மருத்துவ கல்வியை வழங்கிட வேண்டும் என்று முனைப்புடன் பணியாற்றுகிறார்.

இதற்காக ஒருவரிடம் கடன் வாங்குகிறார். வட்டி கட்ட முடியாததால் கடன் கொடுத்த நபர் பாலின சிறுபான்மையராக மாறி இருக்கும் அவரது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார். இதனால் ஆவேசமடையும் அபிராமியின் கையில் துப்பாக்கி கிடைக்கிறது. அந்த துப்பாக்கியை அவர் பாவித்து தன் மனக் கொந்தளிப்பை அடக்கிக்கொள்கிறாரா? இல்லையா? என்பது மற்றொரு கதை.

அஞ்சலி நாயர் – தன் தந்தையின் கனவை நனவாக்குவதற்காக தன் விருப்பத்தை துறந்து, இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார். தாலி கட்டிய கணவன் தாம்பத்தியத்திற்கு தகுதியற்றவன் என தெரிய வருகிறது. ஆனாலும் அவர் கருவுற்றிருக்கிறார். இந்த சதிக்கான பின்னணியை அவர் கண்டறியும் தருணத்தில் அவரது கையிலும் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. அந்தத் துப்பாக்கியை அவர் பாவித்து சதியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாரா? இல்லையா? என்பது மற்றொரு கதை.

தலைவாசல் விஜய்- சாதி வெறிபிடித்த மனிதர். இவரது மகள் பவித்ரா லட்சுமி- தந்தையின் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணத்திற்கு தயாராகிறார். காதலரை திருமணம் செய்து கொள்வதற்காக சார் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருக்கிறார். இதனால் இந்த தகவலை அறிந்து கொள்ளும் தலைவாசல் விஜய் கோபத்தின் உச்சிக்கு செல்கிறார் .

அந்தத் தருணத்தில் அவர் அவருடைய கையிலும் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. அந்த துப்பாக்கியை பாவித்து தன் மகளின் தன் விருப்பத்திற்கு எதிரான திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? இல்லையா? என்பது மற்றொரு கதை.

இப்படி நான்கு கதைகளையும் இணைக்கும் மையப் புள்ளியாக துப்பாக்கி ஒன்று இடம்பெறுகிறது. ஒரே துப்பாக்கியை நான்கு வெவ்வேறு தளங்களில் உள்ள வெவ்வேறு கதாபாத்திரத்தின் கைகளில் எப்படி கிடைக்கிறது என்பதனை இயக்குநர் மற்றும் படத்தொகுப்பாளர் இருவரும் சாமர்த்தியமாக விவரித்து ரசிகர்களை ‘சபாஷ் ‘போட வைக்கிறார்கள்.

பரத் காதல் மனைவியை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் தவிப்பு, அதற்காக எடுக்கும் முயற்சிகள் பணத்தேவைக்காக எதையும் செய்ய துணியும் செயல், கொலை செய்த பிறகு அந்தப் பெண் யார் என்பதை அறியும் போது வெளிப்படுத்தும் அதிர்ச்சி கலந்த பதற்றம் மற்றும் சோகமான விரக்தியான காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அதே நேரத்தில் அபிராமி துப்புறவு தொழிலாளியாக அச்சு அசலாக வசன உச்சரிப்பு, மகளிடம் காட்டும் பாசம்,கடினமான சூழலிலும் மகளுக்கு ஊக்கத்தை கொடுத்து படிக்க வைக்க போராடும் போதும் உணர்ச்சிகரமான நடிப்பை தைரியமான பெண்மணியாக நேர்த்தியுடன் நம்பகத்தன்மையுடன் செய்துள்ளார்

அஞ்சலி நாயர் முதலில் குழப்பத்துடன் குடும்ப சூழலை அனுசரித்து செல்லும் போதும், பின்னர் தன் கணவனின் ஏமாற்று செயல், மாமியாரின் துரொகம், தனக்கு நேர்ந்த கொடுமையை கிரகிக்க முடியாமல் எடுக்கும் முடிவு என்று துணிச்சலான பாத்திரத்தில் மிளிர்கிறார்

தலைவாசல் விஜய் தனது ஜாதிக்கொள்கையை வலுவாக நிலை நிறுத்தும் கதாபாத்திரத்தில் அழுத்தமாக செய்திருக்கிறார்.தவறுதலாக செய்யும் ஒரு காரியத்தால் நிலை தடுமாறும் இடத்தில் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கல்கி, ராஜாஜி, கனிகா, எம்.ஜெகன் கவிராஜ், அரோல் டி.சங்கர், ஷான், பி.ஜி.எஸ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் கே.எஸ்.காளிதாஸ் மற்றும் கண்ணா.ஆர் கதைக்கு ஏற்ப தங்களது கேமராக்களை பயணிக்க வைத்திருந்தாலும், தங்கள் பணியில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் இசையில் பாடல்கள் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை என்றாலும், பின்னணி இசையில் குறையில்லை.

நான்கு கதைகளின் பயணங்களுக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை என்றாலும், அவற்றை சம்மந்தப்படுத்தி பயணிக்கும் துப்பாக்கியின் பயணத்தை லான் லீனர் முறையில் தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், திரைக்கதையின் சுவாரஸ்யத்திற்கு உதவியிருக்கிறார்.

உண்மை சம்பவம் ஒன்றை மையக்கருவாக வைத்துக்கொண்டு இயக்குநர் பிரசாத் முருகன் அமைத்திருக்கும் திரைக்கதையின் பயணம் சுவாரஸ்யமாக இருப்பதோடு, நான்கு கதைகளையும் நகர்த்திய விதம், அடுத்தது என்ன? என்ற கேள்வியோடு பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிடச் செய்து விடுகிறது.