தேர்தலில் நின்று ஒரே ஒரு ஒட்டு வாங்கியதால் ஒத்த ஒட்டு முத்தையா என அழைக்கப்படும் கவுண்டமணி, மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றார். ஆனால் சகோதரிகளோ வேறு நபர்களை விரும்புகின்றனர். ஆனால், சகோதரிகள் மூவரும், கவுண்டமணியிடம் பொய் சொல்லி பெண் பார்க்க ஏற்பாடு செய்கின்றனர்.
இந்த சமயத்தில் மீண்டும் தேர்தல் வருகிறது. இம்முறை கவுண்டமணிக்கு கட்சி சீட்டு தராமல் கவுண்டமணியின் டிரைவராக இருக்கும் யோகி பாபுவிற்கு சீட்டு கொடுக்கிறது. இதனால் கோபம் அடைந்த கவுண்டமணி கட்சியை விட்டு விலகி சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றாரா? தங்கைகள் மூவரும் தங்களது திட்டத்தில் ஜெயித்தார்களா? முத்தையா ஏன் ஒரே குடும்பத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார்? இவர்களின் நாடகம் அம்பலமானதா? இதுதான் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் கவுண்டமணியின் கவுண்டர்கள் வழக்கம் போல் ரசிகர்களை சிரிக்க வைப்பது போல் இருந்தாலும், அதில் பழைய கம்பீரம், வேகம், டைமிங் மற்றும் உடல்மொழி ஆகியவை நகைச்சுவைக்கு சற்று தடைபோடவே செய்கின்றது. ஆனாலும் 80 வயதை கடந்த கவுண்டமணி நடிக்க முயற்சி செய்ததற்கு பாராட்டலாம்.
யோகிபாபுவின் காமெடி எதிர்பார்த்து அளவிற்கு படத்தில் எடுபடாமல் போனது சற்று ஏமாற்றம் தான்
வாசன் கார்த்திக்,அன்பு மயில்சாமி,கஜேஸ் நாகேஷ், ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லஷ்மண், வையாபுரி, முத்துக்காளை, டி.ஆர்.சீனிவாசன், கூல் சுரேஷ், சதீஸ் மோகன், செண்ட்ராயன், இயக்குனர் சாய் ராஜகோபால், டெம்பிள் சிட்டி குமார், மணவை பொன் மாணிக்கம் என படத்தில் ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள். டி எஸ் ஆர், காயத்ரி இருவரும் சிரிக்க வைக்கின்றனர். சிங்கமுத்து கோஷ்டியினரும் முடிந்த அளவு சிரிக்க வைக்கின்றனர்.
சித்தார்த் விபின் இசையில், சினேகன், மோகன்ராஜா, சாய் ராஜகோபால் ஆகியோரது வரிகளில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம். எஸ்.ஏ.காத்தவராயனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது
கவுண்டமணியை வைத்துக்கொண்டு இயக்குனர் அரசியல் நையாண்டியோடு ஒரு படத்தை கொடுக்கலாம் என்று நினைத்திருக்கிறார்சமகால அரசியலில் நடந்த, நடக்கும் அத்தனை கேலிக்கூத்துக்களையும், நக்கலும் நையாண்டியுமாக காட்சிப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் சாய் ராஜகோபால். பாரபட்சம் இல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் நக்கலடித்திருப்பது தான் சிறப்பு.
நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் நடிக்க வந்துள்ள கவுண்டமணி நடிப்பில் வெளியாகி உள்ள படம் என்பதால் அதற்காக ஒருமுறை இந்த ஒத்த ஓட்டு முத்தையா படத்தை பார்க்கலாம்