ஈழத்தமிழர்களின் போராட்டம், அவர்களது வாழ்க்கை குறித்து பல படங்கள் வந்திருக்கின்றன.. ஆனால் இப்போது அவர்களது வாழ்க்கையே போராட்டமாக தான் இருக்கிறது என சில உண்மைகளை சொல்வதாக கூறி வெளியாகியுள படம் தான் இந்த ஒற்றை பனைமரம்.
இறுதிப் போருக்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கதைச் சேர்ந்த வீரர்கள் சைனட் உட்கொண்டு தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதில் ஒருவரான நாயகி நவயுகாவை காப்பாற்றி, அடைக்கலம் கொடுக்கும் நாயகன் புதியவன் இராசையா, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் அனாதையாக இருந்த சிறுமிக்கும் அடைக்கலம் கொடுத்து தனது மகளாக வளர்க்கிறார். இந்த மூவரும் போருக்குப் பிந்தைய தங்களது எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.
விதவையான ஈழ பெண்களுக்கு ஒரு சங்கத்தை உருவாக்கி அவர்களின் எதிர்காலத்திற்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சுந்தரத்தின் முயற்சியை அறிந்து அவரை கடத்திச் சென்று ராணுவத்தினர் சித்ரவதை செய்கிறார்கள். அதே சமயம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வாழ்க்கையை நடத்த சிரமப்படும் ஈழ கைம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தும் கொடூரமும் நடைபெறுகிறது.
இதற்கெல்லாம் என்ன தீர்வு கிடைத்தது ? இந்த கொடுமைகளில் இருந்து அவர்களால் மீள முடிந்ததா என்பதை மீதிப்படம் சொல்கிறது.
பொதுவாக ஈழத் தமிழர்களை மையப்படுத்திய படங்கள் என்றாலே, அவர்கள் எதிர்கொண்ட கொடுமைகள், சொந்த மண்ணில் அனைத்தையும் இழந்து அகதிகளாக வாழும் நிலை ஆகியவற்றை மக்களுக்கு சொல்லும் விதமாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் தமிழகர்களே தமிழர்களுக்கு எதிரிகளாக இருப்பது போல் சித்தரித்திருப்பது உண்மையிலே அதிர்ச்சி அளிப்பதாத்தான் இருக்கிறது.
கதாநாயகனாக நடித்து படத்தையும் இயக்கியிருக்கும் புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, நூர்ஜகன், ஜெகன் மாணிக்கம்;, தனுவன் அனைவருமே தங்களது கதாபாத்திரங்களாகவே மாறியுள்ளனர்.
அஷ்வமித்ரா இசையும், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பும், ஒளிப்பதிவாளர் மகிந்த அபசிங்ஹே இலங்கை ஒளிப்பதிவையும் சி.ஜே.ராஜ்குமார் இந்திய ஒளிப்பதிவையும் கச்சிதமாக செய்துள்ளனர்.
ஈழ போருக்குப் பிறகான அந்த போராளிகளின் வாழ்க்கை, அவர்கள் நினைத்ததைப் போல் இல்லை என்றும் “சயனைட் குப்பியைக் கடித்துச் செத்திருக்க வேண்டியதுதானே” என முன்னாள் போராளிகளை சக மனிதர்களே கேட்கும் அளவுக்கு தான் நிலைமை இருக்கிறது என காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராசையா.. படம் பார்க்கும் எத்தனை பேருக்கு இது ஏற்புடையதாக இருக்கும் என்பது தெரியவில்லை.