பட்டாம்பூச்சி ; திரை விமர்சனம்

சீரியல் கில்லர் ஒருவரின் கொலைகளையும், அதற்கான காரணங்களையும் சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படம் தான் பட்டாம்பூச்சி.

1989-ல் நடக்கும் கதை. தூக்கு கைதியான ஜெய்யிடம் கடைசி ஆசை என்ன என்று கேக்க, என்னைப் பற்றி எழுதிய ரிப்போர்டரை சந்திக்க வேண்டும் என்கிறார். ரிப்போர்டரிடம் செய்யாத கொலைகளுக்காக என்னை தூக்கில் போட போகிறார்கள், இந்த கொலையை தான் நான் செய்யவில்லை. ஆனால் பல கொலைகளை செய்த பட்டாம்பூச்சி நான் தான் என கூறி ட்விஸ்ட் கொடுக்கிறார்.

கொலைகளை செய்துவிட்டு பட்டாம்பூச்சி ஓவியத்தை வரைந்துவிட்டு வந்ததால் அப்படி ஒரு பெயர். ஜெய் சொன்னதை வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இந்த வழக்கை காவல்துறை அதிகாரியான சுந்தர்.சி மேற்கொள்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரத்தில் சுந்தர்.சி அசத்தியிருக்கிறார். மகள், மனைவியை பறிகொடுத்த துக்கத்தில் இருந்தாலும், ஜெய் பற்றிய உண்மைகளை கண்டுபிடிக்க போராடுகிறார். படம் முழுக்க சுந்தர்.சிக்கும் ஜெய்க்குமான போராட்டம் தான்.

சாதுவான கதாப்பாத்திரத்தில் நடித்த வந்த ஜெய்க்கு முதன்முதலாக வில்லன் கதாப்பாத்திரம். அதிலும் சைக்கோ கொலைக்காரன் கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். எதோ ஒரு சின்ட்ரோம் காரணமாக அடிக்கடி கழுத்தை திருப்பி நம்மை மிரட்டுகிறார்.

பட்டாம்பூச்சி கொலைகள் பற்றிய செய்திகளை எழுதும் பத்திரிகையாளராக ஹனி ரோஸ் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பிறகு இவர் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார். இருந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கலை இயக்குனர் பிரேம்குமாரும், ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசுவாமியும் 80-களின் காலகட்டத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள்.

சைக்கோ த்ரில்லர் படத்தை மிக விறுவிறுப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் பத்ரி நாராயணன்.

மொத்தத்தில் சைக்கோ த்ரில்லர் பட பிரியர்களுக்கு இந்த பட்டாம்பூச்சி ஒரு விருந்து என்றே சொல்லலாம்.