பேச்சி ; விமர்சனம்


காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ் ஆகிய ஐந்து பேரும் கொல்லிமலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் மலையேற்றம் செல்கிறார்கள்.அவர்களுக்கு வழிகாட்ட பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பாலசரவணன் செல்கிறார். ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் போகக்கூடாது என எச்சரிக்கும் பால சரவணனை மீறி நண்பர்கள் அங்கு செல்கிறார்கள்.

அங்கே எதிர்பார்க்காத பல பயங்கரமான சம்பவங்களை சந்திக்கிறார்கள். இது பேச்சியின் செயல் என்பதை அறிந்துக்கொண்டு, எஞ்சியிருப்பவர்களையாவது காப்பாற்றலாம் என்ற முயற்சியில் ஈடுபடும் பாலசரவணன், அதில் வெற்றி பெற்றாரா?, பேச்சி என்பவர் யார்? என்பதை ரசிகர்கள் அலறும் வகையில் சொல்வதே படத்தின் கதை.

இதுவரை நகைச்சுவை வேடங்களில் பார்த்து வந்த பாலசரவணன் இந்தப்படத்தில் கதையின் நாயகனாக பதவி உயர்வு பெற்றுள்ளார். பேச்சும் வசனமும் கூட மீட்டர் கணக்கில் இல்லாமல் அளந்து அளந்து பேசி அப்ளாஸ் அள்ளுகிறார். காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா மற்றும் மகேஷ் ஆகிய ஐந்து பேரும் தங்களது அச்ச உணர்வை ரசிகர்களிடத்திலும் கடத்தும் விதமாக நடித்திருக்கிறார்கள்.

பகல் நேரங்களில் நடக்கும் சம்பவங்கள் மூலமாகவே பார்வையாளர்களை பயப்பட வைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேய்க்கு துணை நின்று ஜெயித்திருக்கிறார். இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பின்னணி இசை மூலம் பார்வையாளர்களின் படபடப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறார்.

பேய் படங்கள் என்றாலே வீட்டுக்குள் சுற்றும் பேய், இருட்டு நேரம் என என்று மட்டுமே படங்கள் காட்டி வந்த நிலையில் பகல் நேரத்திலேயே பேயை காட்டி மிரள விட்டிருக்கிறார் இயக்குனர் ராமச்சந்திரன். பேச்சி யார் என்று காட்டிய விதமும் அந்த ஃப்ளாஷ்பேக்கும் கதையின் பலம். இந்த பேச்சி திகில் பட ரசிகர்களுக்கு ஏற்ற வித்தியாசமான விருந்தாக அமைந்திருக்கிறது.

போடுங்கப்பா உடனே பேச்சி படத்துக்கு டிக்கெட்டை..