பீட்சா 3 ; விமர்சனம்

மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஸ்வின் காக்கமன், பவித்ரா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் பீட்சா 3.

நவீன உணவகம் ஒன்றை நடத்தி வரும் நளன் (அஸ்வின்), காவல் ஆய்வாளர் பிரேமின் (கவுரவ்) தங்கை கயலை (பவித்ரா) காதலிக்கிறார். நளனின் உணவகத்தில் இரவு நேரத்தில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. அதற்கான காரணத்தை அறிய முடியாமல் குழம்பி நிற்கும் நளன் மீது, 2 கொலைப் பழிகள் விழுகின்றன. அதைச் செய்தது யார், நளனுக்கும் அந்தக் கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மீதி கதை.

அஸ்வின் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி நடிப்பு திறமையை காட்டியுள்ளார். கோபம், காதல், சோகம் என நுண்ணிய உணர்வுகளை சரியாக கடத்தியுள்ளார்.அனுபமா ஒரு தாயாக மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார்.

நளனின் உணவகத்தில் திடீரெனப் பிரபலமாகிவிடும் புதியவகை இனிப்பும் அதன் பின்னணியில் நூல் பிடித்தபடி விலகத்தொடங்கும் மர்ம முடிச்சுகளும் தங்கு தடையற்ற திரை அனுபவத்தைச் சாத்தியமாக்கிவிடுகின்றன.

அவ்வப்போது அணைந்து எரியும் விளக்குகள், வெள்ளை உடையில் தலைவிரிகோலமாக வரும் பேய்கள் ரத்தம் தேய்ந்த முகங்கள் என பல பேய்படங்களில் வந்த காட்சிகளேபீட்சா 3 படத்திலும் வந்துள்ளது. பேய்கள் கொலை செய்வதற்க்கான காரணங்களும் நம்மால் அனுமானம் செய்ய முடிவதும் ஒரு குறையே.

சிறுமிகளிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபடுபவர்களில் பலர் அந்த சிறுமிகளுக்கும், சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற சமூகம் சார்ந்த பிரச்சனையை பீட்சா 3 கதையாக எடுத்துள்ளார் இயக்குநர்.