ஆம்புலன்ஸ் பயணத்தையும் மனித நேயத்தையும் இணைத்து வெளியான அயோத்தி திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் மனதை கவர்ந்து வெற்றி பெற்றது. அதே போல இன்னொரு படமாக ஆனால் வேறு வடிவில் வெளியாகி இருக்கும் படம் தான் போகுமிடம் வெகு தூரமில்லை. இதுவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததா ? பார்க்கலாம்.
ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் விமலுக்கு, தனது மனைவியின் பிரசவத்திற்காக பணம் தேவைப்படுகிறது. அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு எதிர்பாராமல் விபடஹ்தில் இறந்த, ஒரு முதியவரின் பிணத்தை சென்னையில் இருந்து திருநெல்வேலி வரை கொண்டு செல்லும் பணியை ஏற்று கிளம்புகிறார் விமல்.
செல்லும் வழியில் தெருக்கூத்து கலைஞர் கருணாஸ் லிப்ட் கேட்டு ஏறி கொள்கிறார்.. மேலும் ஒரு காதல் ஜோடியும் இவர்களின் வேனில் தஞ்சம் அடைகிறது. இறந்தவரின் மகன்களான ஆடுகளம் நரேன் மற்றும் பவன் இருவரும் தந்தையின் வெவ்வேறு தாரத்திற்கு பிறந்தவர்கள் என்பதால் தந்தைக்கு நான்தான் கொள்ளி வைப்பேன் என இருவரும் மல்லுக்கட்டி நிற்கின்றனர். இடையில் திடீரென பிணம் காணமல் போகிறது. அடுத்து நடந்தது என்ன என்பது மீதிகதை.
வழக்கமான சேட்டைகளை எல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு கடும் கோபம், மனைவி மீதான பாசம், திடீர் ஆக்ஷன், பயம், ஆற்றாமை பன்முக நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் விமல். அந்தவகையில் விமலின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்கிறது. என்பதே உண்மை.
கருணாஸை இன்னொரு கதாநாயகன் என்று சொன்னால் அது மிகையில்லை.. கூத்து கலைஞனாக நடித்து காட்டும் இடங்களில் மிரமிக்க வைக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க வைத்து விடுகிறார்.
பங்காளிகளாக மொத்திக்கொள்ளும் ஆடுகளம் நரேன்,பவன் மற்றும் தீபா சங்கர் ஆகியோர் தங்களது தேர்ந்த நடிப்பால் தென்மாவட்ட மக்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். அருள்தாஸ்,சார்லஸ் வினோத், வேலராமமூர்த்தி உட்பட படத்தில் நடித்துள்ள மற்றவர்களும் தங்கள் பங்கை குறைவின்றிச் செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ரகுநந்தன் பாடல்களில் கவனம் செலுத்தாவிட்டாலும் பின்னணி இசையால், படத்தை சற்று தூக்கி நிறுத்தி இருக்கிறார். டெமல் சேவியர், எட்வர்ட்ஸ் கூட்டணியின் ஒளிப்பதிவில் இரவு நேர நெடுஞ்சாலை காட்சிகள் பரபரப்பு ரகம்.
மனித நேயத்தை மையப்படுத்தி வித்தியாசமான ஒரு கதையை கையில் எடுத்து அதை நேர்த்தியாகவும் கையாண்டிருக்கிறார் இயக்குனர் மைக்கேல் ராஜா. பயண காட்சிகள், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி இவரது தனித்தன்மையை பறைசாற்றுகிறது. பயணம் தான் படம் என்றாலும், அவ்வபோது சகோதர்களுக்கு இடையே நடக்கும் உரிமை போராட்டம் மற்றும் வழியில் வரும் காதல் பிரச்சனை ஆகியவற்றால் படத்தை வேகமாக நகர்த்தி செல்கிறார். ரசிகர்களுக்கு இது இன்னொரு அயோத்தி என்றே சொல்லலாம்.