தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள படம் தான் பிரின்ஸ்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட பாணியில், முழுநீள நகைச்சுவை படத்தை எந்தவித சென்டிமென்ட் ஆக்க்ஷன்களையும் திணிக்காமல் என்டர்டெய்ன்மென்ட் ஒன்லி என்கிற கான்செப்ட்டில் கொடுத்துள்ளனர்.
படத்தின் கதாநாயகியாக உக்ரைன் நாட்டை சார்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்திருக்கிறார். தந்தையாக சத்யராஜ், வில்லன் கதாபாத்திரத்தில் பிரேம்ஜியும், சிறப்பு தோற்றத்தில் சூரியும் நடித்துள்ளனர்.
மக்களுக்குள் ஜாதி, மதம் என்ற எந்தப் பிரிவினையும் கூடாது, மனித நேயம்தான் முக்கியம் என்று ஊருக்கே உதாரணமாக வாழ்ந்து வருகிறார் சத்யராஜ். இவருடைய மகனான சிவகார்த்திகேயன் புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சமூக அறிவியல் ஆசிரியராக இருக்கிறார். அதே பள்ளிக்கு ஆசிரியராக வரும் மரியாவை காதலிக்கிறார். முதலில் மறுக்கும் மரியா, பிறகு சிவாவின் காதலை ஏற்கிறார். ஆனால், தன் தாத்தா, சுதந்திரப் போராட்டத்தில் இறந்தவர் என்பதால் பிரிட்டிஷ் பெண்ணை தன் மகன் காதலிப்பதை ஏற்க மறுக்கிறார் சத்யராஜ்.
மரியாவின் தந்தையும் இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார் இந்த எதிர்ப்புகளை மீறி இவர்களின் திருமணம் நடந்ததா என்பதே மீதிக் கதை.
முழுக்க முழுக்க என்டர்டெயின்மெண்ட் படமாக இதை கொடுத்திருக்கிறார்கள்.
டான் படத்தில் ஸ்டூடன்ட் என்றால் இதில் டீச்சராக தனது ஆஸ்தான காமெடி களத்தில் தனக்கே உரித்தான பாணியில் அசத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன். கதாநாயகி மரியாவை கண்டதும் காதலிப்பதில் தொடங்கி, அந்தக் காதலை எதிர்க்கும் ஊர்க்காரர்களையும் தந்தையையும் அவர்களை தூண்டிவிடும் சிலரையும் சமாளிப்பது என சிவாவின் உழைப்பு படத்துக்கான ஆணிவேர்.
படத்தின் கதை ஒன்லைனாக பார்த்தால் இதில் எங்கே கதை என்றே எண்ண வைக்கும். அப்படியான ஒருகதையை காமெடி ட்ராக் நிறைந்த திரைக்கதையால் அப்பாவித்தனங்கள் நிறைந்த காதாபாத்திரங்களால், வசனங்களால் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிப்புடன் எங்கேஜிங்காக கொண்டுச் சென்றதற்காக இயக்குநர் அனுதீப்பிற்கு வாழ்த்துச் சொல்லலாம்.
தேசபக்தியை விட மனிதமே முக்கியம் என்பதை வலியுறுத்திய வகையிலும், போரினால் ஏற்படும் இழப்புகளை பேசிய வகையிலும், தேசபக்தியை கேடயமாக பயன்படுத்தும் குரூப் ஒரு டிராமா ட்ரூப் என்று சுட்டிக்காட்டிய வகையிலும், இவற்றையெல்லாம் இன்றைய கால இளைஞர்களுக்கு இணக்கமான நடையில் திரையில் கொண்டுவந்த விதத்திற்காகவும் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படம் முக்கியத்துவம் பெறுகிறது.
தன்னுடைய முதல்படத்தில் முடிந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார் மரியா. நில அபகரிப்பு மாஃபியா கும்பல் தலைவன் வரும் பிரேம்ஜி அமரன் ஒரு ஆச்சரியம். வழக்கமாக காமெடி பாத்திரங்களிலேயே பார்த்துவிட்ட பிரேம்ஜியே, சற்று சீரியஸான ரோலில் பார்ப்பது ரசிகர்களுக்கு புது அனுபவம்தான்
வழக்கமான கதாப்பாத்திரம் சத்யராஜிற்கு, ஆனால் அதை சிறப்பாக செய்திருக்கிறார்.
தமனின் இசையும், மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில் ஒரு நல்ல காமெடி படம் பார்க்க வேண்டுமென்றால், தாராளமாக பிரின்ஸ் செல்லலாம்.