50 வது படத்தில் நாயகனாக மட்டும் இன்றி இயக்குநராகவும் பயணித்திருக்கும் தனுஷ், தனது ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை மனதில் வைத்து இந்தப்படத்தை கொடுத்திருக்கிறாரா ? பார்க்கலாம்.
தாய், தந்தை இல்லாத தனுஷ், தனது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கையை வளர்த்து வருகிறார். அவரது இருப்பிடம் சுற்றி ரவுடிசமும், அதில் அவர் ஈடுபடக்கூடிய சூழல் இருந்தாலும், அவற்றில் இருந்து ஒதுங்கியிருப்பதோடு, தனது தம்பிகளையும் அந்த பக்கம் செல்லவிடாமல் அவர்களை ஆளாக்க நினைக்கிறார்.
ஆனால், அவரது தம்பி செய்யும் தவறால், தனுஷ் கத்தி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு அவரது வாழ்க்கை என்னவானது, அவரது தம்பிகள் மற்றும் தங்கையின் வாழ்க்கை அவர் நினைத்தது போல் அமைந்ததா?, இல்லையா? என்பதை ரத்தமும், சதையுமாக சொல்வது தான் ‘ராயன்
காத்தவராயனாக தனுஷ் கூர்மையான ஆனால் அமைதியான பார்வை, குறைவான அழுத்தமான வசனம், மொட்டைத் தலையுடன் தான் நினைத்ததை செய்ய வைக்கும் சாதுர்யமான செயல், தன் குடும்பத்தைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள், அதற்காக கொலை கூட செய்யத்துணியும் துணிச்சல், மிரட்டி பணிய வைக்கும் தாதாவையே அடிபணிய வைக்கும் சாமர்த்தியம், எதிரிகளை துவம்சம் செய்வது, பாசக்கார அண்ணனான சிங்கிள் சிங்கமாக தனித்து நின்று ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி ரத்தம் தெறிக்க ஆக்ஷனில் அதகளம் செய்துள்ளார் தனுஷ்.
அசால்டான மிரட்டல் வில்லனாக எஸ். ஜே. சூர்யா வந்தாலும், இரண்டு மனைவிகளிடம் மாட்டிக் கொண்டு அவதிப்படும் இடங்களில் நடிப்பில் தெறிக்க விடுகிறார். அலட்டிக்கொள்ளாமல் மாஸ்டர் பிளான் போட்டு வில்லன்களை மோதவிட்டு சைலன்ட் போலீஸ் வில்லத்தனத்தில் தனித்து தெரிகிறார் பிரகாஷ்ராஜ்
தனுஷின் சகோதரராக வரும் சந்தீப் கிஷன் நடிப்பில் சில இடங்களில் டெம்ப்ளேட்தனம் தெரிந்தாலும்.. அவருக்கும் அபர்ணா பாலமுரளிக்கும் இடையிலான காதலும், நடனமும் கவனிக்க வைக்கிறது. அதட்டும் குரல், அசத்தல் நடனம், ஊடல் காதலுடன் அபர்ணா பாலமுரளி, சில காட்சகள் என்றாலும் வரலட்சுமி சரத்குமார்,சரவணன்,திலீபன் முக்கிய பங்களிப்பு சிறப்பு.
சின்ன ரோல் என்றாலும் ஓகே தான் என்று ஒத்துக் கொண்டு நடித்துக் கொடுத்திருப்பார் போலும் காளிதாஸ் ஜெயராம். முதல் அண்ணனின் மேல் மரியாதை இருந்தாலும், இரண்டாவது அண்ணனிடம் காட்டும் பாசத்தால் தடம் மாறி சென்று பின்னர் வருந்தும் மாணிக்கவேல்ராயனாக சிறப்பாக செய்துள்ளார்
துர்காவாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நல்லவிதமாக பயன்படுத்தி அனுபவமிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். அதிலும் இரண்டாம் பாதியில் இவரின் நடிப்பு மிரட்டல்.
படத்தின் டைடில் இடம்பெறும் போதே பின்னணி இசை மூலம் கவனம் ஈர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான், தனது பீஜியம் மூலம் காட்சிகளின் வேகத்தையும், விறுவிறுப்பையும் அதிகரிக்கச் செய்கிறார். பாடல்கள் ஏற்கனவே முனுமுனுக்க வைத்த நிலையில், அதை படமாக்கிய விதம் சிலிர்த்து எழ வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் கேமரா காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருப்பதோடு, தெறிக்கும் ரத்தத்தின் வண்ணம் திரையில் தெரியாமல் இருப்பதற்காக பல காட்சிகளில் சிவப்பு விளக்குகளின் வெளிச்சத்தை படரவிட்டிருக்கிறார்.
எளிமையான அண்ணன், தம்பி, தங்கை பாசத்துடன் தாதாக்களின் தலையீடு, சண்டை கலந்து பழி வாங்கும் கதைக்களமாக எழுதி இயக்கியருக்கிறார் தனுஷ். இதில் குடும்ப சென்டிமெண்ட், பாசம், துரோகம், சூழ்ச்சி, பகையுடன் பல திருப்பங்கள் நிறைந்த வன்முறையோடு உணர்ச்சிகள் நிறைந்த படமாக கொடுத்துள்ளார். முதல் பாதி முழுக்க முழுக்க அப்பட்டமான பாட்ஷா படத்தின் சாயல் இருந்ததை பார்க்க முடிந்தது. ஆக்சன் படத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்ட இயக்குநர் தனுஷ் அதற்காக தெரிவு செய்த கதைக்களம் பார்வையாளர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானது தான் என்றாலும்.. அதில் இயல்பான மற்றும் நம்பகத் தன்மை மிகுந்த கதாபாத்திரங்களை உருவாக்கி படத்தை தொய்வில்லாமல் இயக்கியிருக்கிறார்.