ரத்னம் ; விமர்சனம்


தாமிரபரணி, பூஜை என இரண்டு வெற்றிப்படங்களை தொடர்ந்து விஷால்-ஹரி கூட்டணியில் மூன்றாவ தாக வெளியாகி இருக்கும் படம் தான் ரத்னம். இதில் ஹாட்ரிக் வெற்றியை ருசித்திருக்கிரார்களா ? பார்க்கலாம்.

சிறுவயதிலேயே அம்மாவை இழந்த விஷால், சமுத்திரக்கனியை காப்பற்றுவதற்காக ஒரு கொலைசெய்து விட்டு ஜெயிலுக்கு செல்கிறார். திரும்பிவரும்போது சமுத்திரக்கனி எம்.எல்ஏவாக மாறி இருக்க அவரது வலதுகையாக மாறுகிறார் விஷால். தனது ஊருக்கு தேர்வெழுத வரும் பிரியா பவானி சங்கரை எதிர்பாராத விதமாக எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார். அவர் மீது ஒரு இனம்புரியாத அன்பு விஷாலுக்கு உருவாகிறது.

பிரியாவின் ஊருக்கே சென்று அவரை கொலைசெய்ய முயற்சிக்கும் ஆட்கள் யார் என கண்டுபிடித்து அவர்களுடன் மோதுகிறார். அதன் பின்னணியில் இருக்கும் காரணமும் விஷால் யார் எங்களிற உண்மையும்,விஷால் பிரியாவுக்காக எதற்காக இவ்வளவு மெனக்கெடுகிறார் என்கிற விஷயமும் ஒவ்வொன்றாக தெரிய வருகிறது. இறுதியில் எதிரிகளை வதம் செய்தாரா விஷால் என்பது மீதிக்கதை.

ஹரி படம் என்றாலே விஷால் டோட்டலாக உருமாறி விடுவார். அந்த மேஜிக் இதிலும் இருக்கிறது. அதேசமயம் ஆக்ரோஷம், செண்டிமெண்ட் என இரண்டையும் சம அளவில் தரவேண்டியதை சரியாக பேலன்ஸ் செய்துள்ளார். குறிப்பாக அவர் அம்மா, பிரியா பவானி சங்கருக்கான உண்மை அவருக்கு மட்டுமல்ல நமக்கும் தெரிய வரும்போது விஷாலின் உணர்வுகளோடு நாமும் பயணிக்க துவங்கி விடுகிறோம்.

பிரியா பவானி சங்கருக்கு நடிக்க நிறைய வாய்ப்பு. அதிலும் அவரது கதாபாத்திரத்தில் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் வேறு.. பாசம், பயம், காதல் என பலவித உணர்வுகளை அழகாக பிரதிபலித்திருக்கிறார். தன்னை ஏற்க மறுக்கும் விஷால் சொல்லும் காரணத்தை கேட்டு குமுறும் இடம் அருமையான நடிப்பு.

ஊருக்கு நல்லது செய்யும் ஐயா சரத்குமார், வேங்கை ராஜ்கிரண் போல இதில் ஒரு பக்குவப்பட்ட கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி கச்சிதமாக பொருந்துகிறார். வில்லண்களாக முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார் என மூவரும் பொருத்தமான தேர்வு. ஆந்திர எல்லையில் நடக்கும் கதை என்பதால் ஆந்திர வில்லன்களை போலவே இவர்களை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களுடைய பிளாஸ்பேக் பற்றி தெரிய வரும்போது நமக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தான்.

காமெடிக்கு யோகி பாபு. படம் முழுக்க பயணித்தாலும் சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார் திடீரென ஒரு கட்டத்தில் பிரியா பவானியை காப்பாற்றும் அளவிற்கு ஆக்சன் அவதாரமும் எடுத்து ஆச்சரியப்படுத்துகிறார். ஜெயபிரகாஷ், துளசி, விஜயகுமார், ஓயஜி மகேந்திரன் என இன்னும் பல கதாபாத்திரங்கள் படத்தோடு தங்களை பொருத்திக் கொண்டிருக்கின்றனர். ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கௌதம் மேனனின் அட்ராசிட்டி கிளாப்ஸ் அள்ளுகிறது

படத்தில் இயக்குனர் ஹரியை விட ஒளிப்பதிவாளர் சுகுமாருக்குத தான் இரு மடங்கு வேலை. எந்நேரமும் கேமரா பறந்து கொண்டும நாலாபுரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆக்சன் காட்சிகளின் விறுவிறுப்புக்கு சுகுமாரின் ஒளிப்பதிவு கூடுதல் பலம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இரண்டு பாடல்கள் மீண்டும் கேட்கலாம் என்பது போல சுகமாக இருக்கிறது பின்னணி இசையும் படத்தின் வேகத்தை கூட்ட உதவி இருக்கிறது.

ஹரி படங்கள் என்றாலே ஆக்சன், சென்டிமெண்ட், காமெடி என எல்லாமே சரி விகிதத்தில் கலந்து இருக்கும். எதிர்பாராத சில திருப்பங்களும் இருக்கும். இந்த படத்தில் அவை எல்லாமே இருந்தாலும் உரிய இடத்தில் உரிய முறையில் பொருத்தப்படாமல் இருப்பது தான் இந்த படத்தின் மிகப்பெரிய மைனஸ். குறிப்பாக இதில் பல காட்சிகளை விட்டுவிட்டு ரசிக்க முடியும் நம்மால் தொடர்ச்சியாக இந்த படத்தை ஈடுபாட்டுடன் ரசிக்க முடிகிறதா என்பது கேள்விக்குறியே.