ரத்தம் ; விமர்சனம்


மிகப் பிரபலமான பத்திரிக்கை நிறுவனத்தின் முதலாளியான நிழல்கள் ரவியின் மகன் அவரது அலுவலகத்திலேயே கொல்லப்படுகிறார். அதைத் தொடர்ந்து அதே போல அடுத்தடுத்து இன்னும் இரண்டு கொலைகள் நடைபெறுகின்றன. தனது மகனின் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவும் மீண்டும் தனது பத்திரிகையை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் தன்னிடம் ஏற்கனவே வேலை பார்த்த, தற்போது கொல்கத்தாவில் செட்டில் ஆகிவிட்ட மிகச்சிறந்த புலனாய்வு பத்திரிக்கை நிருபராந விஜய் ஆண்டனியை அழைத்து வருகிறார்.

அவரும் தனது பாணியில் புலனாய்வு செய்து இந்த மூன்று கொலைகளுக்கும் பின்னணியில் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் போது அவருக்கு மட்டும் அல்ல படம் பார்க்கும் நமக்கே கூட சற்று அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இந்த கொலைகளின் பின்னணி என்ன ? யார் இதை செய்தது ? விஜய் ஆண்டனியால் கொலையாளியை நெருங்க முடிந்ததா என்பது மீதி கதை.

விஜய் ஆண்டனி பற்றி சொல்லவே தேவையில்லை.அவர் தனது முக பாவத்திற்கும் மூடுக்கும் ஏற்ற கதாபாத்திரத்தையே தேர்வு செய்பவர். இந்த படத்திலும் மனைவியை பறிகொடுத்துவிட்டு தனது குழந்தையை தனியாக வளர்க்கும் நிருபர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி விடுகிறார். குற்றவாளியை கண்டுபிடிக்க அவர் புலனாய்வு செய்யும் விதம் சில சமயம் சாதாரணமாக தோன்றினாலும் பல இடங்களில் ஆச்சரியப்படுத்தவும் வைக்கிறது.

படத்தில் மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என மூன்று கதாநாயகிகள் இருந்தாலும் அதிகமாக ஸ்கோர் செய்பவர் மகிமா நம்பியார் தான். அதேபோல பத்திரிக்கை அலுவலகத்திற்கு உள்ளேயே தனது பணி முடிந்து விட்டாலும் அதில் முடிந்த அளவிற்கு சிறப்பித்து இருக்கிறார் நந்திதா ஸ்வேதா.

ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சனையை கையில் எடுத்து அதை சுற்றி கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள உள்ள இந்தப்படத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நடக்கும் சம்பவங்களையே இயக்குனர் சி.எஸ்.அமுதன் வைத்துள்ளதால் குற்றங்களுடன் மிகவும் தொடர்புபடுத்தி பார்க்க முடிகிறது. பெரும்பாலான சூழ்நிலைகள், திருப்பங்களும் கணிக்க முடியாதவை.

மிகவும் அறிவாளியான ஹீரோ வில்லனை கண்டுபிடிக்கும் காட்சிகள் சூப்பராக அமைந்திருந்தாலும் ஏனோ கதையில் உள்ள அந்த விறுவிறுப்பு திரைக்கதையில் இல்லை. ஏற்கனவே வெளியான ஹிட் படங்களை கிண்டலடித்து இரண்டு காமெடி படங்களை வெற்றிகரமாக கொடுத்த இயக்குனர் சி.எஸ் அமுதன் சீரியஸாக ஒரு படம் கொடுக்கும் முயற்சியில் அதை முழுமையான வெற்றியாக மாற்ற தவறி இருக்கிறார் என்றே சொல்லலாம்.