காதலிக்க நேரமில்லை விமர்சனம்

kadhalikka neramillai movie review
ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம்.செண்பக மூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை ஆகியோர் தயாரித்திருக்கும் காதலிக்க நேரமில்லை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி.

கதையின் நாயகனான ஜெயம் ரவியும் டிஜே பானுவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். பானுவிற்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை. ஆனால், ஜெயம் ரவிக்கு இதில் உடன்பாடில்லை.. இதனால், இருவரும் பிரிந்துவிடுகிறார்கள்.

நித்யாமேனனும் ஜான் கொக்கனும் காதலர்கள். இதில் நித்யா மேனனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை. ஜான் கொகேன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து கொண்ட நித்யா மேனன், ஜான் கொக்கனை விட்டு பிரிகிறார்.

காதலியைப் பிரிந்த நாயகன் ரவிமோகன்,கணவனைப் பிரிந்த நாயகி நித்யாமேனன் ஆகியோர் சந்திக்க நேர்கிறது.ஒருவருக்கொருவர் ஈர்ப்பும் ஏற்படுகிறது.அவர்களறியாமல் அவர்களுக்குள் ஏற்கெனவே ஒரு பிணைப்பும் இருக்கிறது.அது என்ன? அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம்.

நாயகன் ஜெயம் ரவி கதையின் நாயகனாக இக்கதைக்கு ஏற்ற நாயகனாக மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நித்யாமேனனுடனான காதலை மிகவும் இயல்பாக கொடுத்து நம்மை கதைக்குள் இழுத்துச் சென்றிருக்கிறார் ஜெயம் ரவி.

நாயகி நித்யா மேனனுக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை சிரமின்றி வெகு இயல்பாக கையாண்டிருப்பது அவருடைய நடிப்புக்கு சாட்சி. முதலிருந்து கடைசி வரை, ஒவ்வொரு காட்சிகளுக்கும் பலம் சேர்க்கிறார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய இருப்பினை பதிவு செய்வது போல் இந்தப்படத்திலும் அழுத்தமாக பதிவு செய்கிறார்.

ரவி மோகனின் காதலியாக T.J.பானு. மாடலாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கேற்ற சரியான தேர்வு. நண்பர்களாக நடித்திருக்கும் வினய், யோகி பாபு ஆகியோர் சிரிக்க வைத்திருக்கிறார்கள். மலையாள நடிகர் லால்,மனோ,லட்சுமி ராமகிருஷ்ணன்,வினோதினி ஆகியோர் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் பல்வேறு ரகங்களில் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்ப மென்மையாக பயணிக்கிறது.

ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரி, கலர்புல்லான விளம்பர படங்களை பார்ப்பது போல் அனைத்துக் காட்சிகளையும் பளிச்சென்று படமாக்கியிருக்கிறார். அவர் கேட்டதை விட கூடுதல் வசதிகளை தயாரிப்பாளர் செய்துக் கொடுத்திருப்பார் போலியிருக்கு, அந்த அளவுக்கு படத்தை பளபளப்பாக பட்டை தீட்டியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் கிருத்திகா உதயநிதி, பெண்ணியம் பேசாத பெண்களுக்கான ஒரு படத்தை ஆண்களும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். இந்த படம் 2K kids தாண்டி அடுத்த தலைமுறைக்கான படம் என்றே சொல்லலாம், அத்தனை முற்போக்கான விஷயங்கள் படத்தில் நிறைந்துள்ளன

கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு கதையை கையில் எடுத்து, மிகவும் மெல்லியக்கோட்டின் மேல் நடப்பது போன்று இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஒரு கவித்துவமான காதல் கதையை எடுத்துக்கொண்டு அதை மிகவும் நேர்த்தியாக இயக்கவும் செய்திருக்கிறார்.