அயோத்தி ; விமர்சனம்

அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், யாஷ்பால் ஷர்மா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அயோத்தி படம் மதத்தை விட மனிதமே சிறந்தது என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

அயோத்தியில் இந்து மத நம்பிக்கையின் மீது முழு ஈடுபாடுடன் வசிப்பவர் யஷ்பால் ஷர்மா. மனைவி, மகள், மகன் ஆகியோரை அடிமைத்தனத்துடன் நடத்துகிறார். அவருக்கும் அவர் மீது கடும் பயம். இந்த சூழலில் ஒரு தீபாவளி பண்டிகையை அன்று அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு குடும்பத்துடன் புனித யாத்திரை வருகிறார் யஷ்பால்.
அங்கு சென்று வந்தால் தன் கணவர் மாறிவிடுவார் என்று அவரின் மனைவி அஞ்சு அஸ்ரானி நினைக்கிறார். அந்த பயணத்தில் மதுரையில் ராமேஸ்வரம் செல்லும் வழியில் பயணம் செய்யும் கார் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் யஷ்பால். அப்போது நிகழும் விபத்தில் அவரின் மனைவிக்கு தலையில் பலத்த அடிப்பட்டு மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துவிடுகிறார்.
மத அடிப்படையில் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என யஷ்பால் சர்மா கூறுகிறார். அதனால் உடற்கூறாய்வு செய்ய கூடாது என மருதுவர்கள், காவல்துறையினர் என அனைவருடனும் சண்டையிடுகிறார். அதற்கு பின் என்ன நடக்கிறது என்பதே அயோத்தி.

மொழி தெரியாத ஊர், இறந்துபோன அம்மா, கட்டுமிராண்டி அப்பா என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார் நாயகி. அவரின் நிலையை பார்த்து நாயகன் சசிகுமார் உதவுகிறார். இறந்த உடலை அயோத்தி அனுப்ப பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. யார் என்றே தெரியாத குடும்பம், பெயரே சொல்லமல் உதவும் நாயகன் ஆகியோரை சுற்றியே கதை எழுதப்பட்டுள்ளது. இறுதியில் அந்த இறந்த சடலத்துடன் சொந்த ஊரான அயோதிக்கு எப்படி திரும்பி சென்றார்? அவருக்கு சசிகுமார் எவ்வாறு உதவினார்? என்பதை அழுத்தமாக கூறி இருக்கும் படமே அயோத்தி.

ஹீரோவாக இல்லாமல் கதையின் நாயகனாக இப்படத்தில் ஜொலிக்கிறார் சசிகுமார். நாடோடிகளுக்கு பிறகு, முன் பின், தெரியாதவர்களுக்கு உதவும் ஒரு இளைஞனாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். பல எமோஷனல் காட்சிகளை தன் கண்களாலே வெளிப்படுத்தி நம்மை உருகவும் வைக்கிறார்.

கதையின் மற்றொரு தூணாக வருவது யஷ்பால் ஷர்மா, ஆணாதிக்க மனநிலை கொண்ட ஒரு நபராகவே வாழ்ந்திருக்கிறார். அவர் நடிக்கிறார் என்பதை தாண்டி ரசிகர்களுக்கு அவர் செய்யும் செயல்கள் உண்மையாகவே கோபத்தை வரவழைப்பதாக இருப்பதே அவருடைய எதார்த்த நடிப்பின் சிறப்பு. வழக்கமான காமெடிகள் இல்லாமல் இப்படத்தில் முழு நீள குணசத்திர நடிகராக அசத்தியிருக்கிறார் புகழ்.

சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் போஸ் வெங்கட், வினோத், ராமச்சந்திரன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரையிலான பயணத்தில் உணர்வுபூர்வமான காட்சிகள் பல உள்ளன. மதத்தை தாண்டி நிற்கும் மனிதமே முக்கியம், அதுவே சிறந்தது என்பதை துணிச்சலுடன் சொல்லியுள்ளனர். குறிப்பாக, படத்தின் இறுதி காட்சி யாரும் எதிர்பாராதது. அந்த காசிக்கு ரசிகர்கள் பலரும் கை தட்டி பாராட்டுகின்றனர்.

மொத்தத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படம் அயோத்தி.