தமிழில் சினிமா பின்னணி கொண்ட படங்கள் வெகு குறைவாகவே வெளி வருகின்றன. அப்படியே வந்தாலும் பல படங்கள் வெற்றியை பெற முடியாமலே போனது. அந்த சாபத்தை உடைக்கும் விதமாக வெளியாகி இருக்கிறது ‘ஸ்டார்’ படம். சாபத்தை உடைத்து சாதித்ததா இந்த ஸ்டார் ? பார்க்கலாம்.
சினிமாவில் நடிகராக சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஊரைவிட்டு ஓடி வந்த லால், அதில் சாதிக்க முடியாமல் போட்டோகிராபர் ஆகிறார். பின்னர் தன் மகன் கவினை நடிகன் ஆக்குவதற்காக பெரும் முயற்சிகள் எடுக்கிறார். ஆனால், அம்மா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவரது ஆசைக்கு பொறியியல் படித்து முடிக்கும் கவின், தனது நடிப்பு கனவோடு தொடர்ந்து பயணிக்கிறார். கூடவே அவருக்கு ஒரு காதலும் வந்து சேர்கிறது. அவரது கனவை நினைவாக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் போது, காலம் அவரது வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது. அதன்பின் கவின் தன் லட்சியத்தை அடைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
சினிமா ஹீரோ ஆக வேண்டும் என்கிற துடிப்பில் இருக்கும் ஒரு இளைஞனை கண் முன் நிறுத்தி இருக்கிறார் கவின். கல்லூரி காலங்களில் நடனம், காதல் என்று அசத்துபவர், வாய்ப்புகளுக்காக காத்திருந்து ஏமாந்து போகும் காட்சிகளில் கனவுகளுக்காக கஷ்ட்டப்பட்டும் இளைஞர்களின் பிரதிபலிப்பாகவே மாறிவிட்டார். கவினின் வளர்ச்சிக்கு அடுத்த கட்டமாக இந்தப்படம் நிச்சயம் அமையும்.
ஹீரோ எழும்போது ஒரு ஹீரோயினும், ஹீரோ தடுமாறும் போது தூக்கி விடும் கையாக மற்றொரு ஹீரோயினுமாக ப்ரீத்தி முகுந்தன் மற்றும் ஆதித்தி பொஹங்கர் என நடித்த கதாநாயகிகள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள்.
தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்கத் துடிக்கும் பாசக்கார அப்பாவை கண் முன் நிறுத்துகிறார் நடிகர் லால்.. கவினின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், ராஜா ராணி பாண்டியன், சஞ்சய் ஸ்வரூப், தீரஜ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
யுவன் தனது இசையால் பல இடங்களில் வசியம் செய்கிறார். பாடல்களும் கேட்கும் ரகமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் எழில் அரசு எண்பதுகளின் இறுதியில் தொடங்கும் கதையை படிபடியாக தற்போதைய காலக்கட்டத்திற்கு அழகாக நகர்த்தி இருக்கிறார். கனவுகளுக்காக இறுதி வரை போராடும் அனைவரும் ஸ்டார் தான் என்ற ஒன்லைனை வைத்துக்கொண்டு தனது சொந்த வாழக்கை கதையையே இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் இளன்.
சினிமாவில் சாதிக்கும் கனவுள்ளவர்கள் தாரளமாக ஒருமுறை இந்தப்படத்தை பார்க்கலாம்.